மாணவர்களுக்கு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், சிறுசேமிப்பின் மூலம் மாவட்டத்தில் எதிர்வரும் புத்தகத்திருவிழாவில் மாணவர்கள் புத்தகங்கள் வாங்கும் விதமாக புத்தக உண்டியல்களை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார். ---
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (31.07.2024) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், சிறுசேமிப்பின் மூலம் மாவட்டத்தில் எதிர்வரும் புத்தகத் திருவிழாவில் மாணவர்கள் புத்தகங்கள் வாங்க புத்தக உண்டியல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்.
புத்தக வாசிப்பை குறிப்பாக மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் நோக்கில், ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நமது மாவட்டத்தில் புத்தக திருவிழா விரைவில் நடைபெற இருக்கிறது.
கடந்தாண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு, புத்தகங்களை வாங்கினார்கள். இந்த ஆண்டும் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், புத்தக உண்டியல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அன்றாடம் சேமிக்கும் பணத்தை கொண்டு புத்தகம் வாங்க வரும் மாணவர்களுக்கு, ஏற்கனவே உள்ள 10 சதவிகித தள்ளுபடியுடன், கூடுதலாக 10 சதவிகித தள்ளுபடி வழங்கப்படும்.
அடுத்தவர்களின் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்பவன் அறிவாளி. அனுபவங்களை எளிதாக பெற வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி புத்தகங்கள் மட்டும்தான்.புத்தகங்கள் என்பது யாராவது ஒருவரின் அனுபவங்கள் அல்லது யாராவது செய்த தவறுகளின் மொத்த தொகுப்பு ஆகும். எது சம்மந்தமான புத்தகங்களை படிக்கும் போதும் அது குறித்தான ஆர்வங்கள் உண்டாகும். அதனால் ஒரு கனவு உருவாகும். அந்த கனவை அடைய வேண்டும் என்றால் அதற்கு தேவையான உழைப்பு, அதை பற்றி தேவையான அறிவு இவற்றையெல்லாம் இதுபோன்ற புத்தகவாசிப்பு உங்களுக்கு அளிக்கிறது.
மாணவர்கள் வரலாறு, கதை உள்ளிட்டவை குறித்தும், பெண்களுக்கான உரிமைகள் எவ்வாறு கிடைத்தது, பெண்களுக்கான வாக்குரிமை, சொத்துரிமை, அதற்கு பின்னால் இருந்த போராட்டம் என்ன உள்ளிட்ட நிறைய பெண்கள் முன்னேற்றம் தொடர்பான புத்தகங்களும் இருக்கின்றன. இது போன்ற ஏதாவது ஒரு பகுதியில் நீங்கள் வருடத்திற்கு ஒரு புத்தகத்தில் இருந்து ஆரம்பித்தால் அறியாமை விலகும்.இந்த முயற்சி என்பது மாணவர்களை புத்தகங்கள் வாங்குவதற்கு ஊக்குவிப்பதற்கான செயல்பாடு. எனவே இதை நீங்கள் பயன்படுத்தி புத்தக திருவிழாவில் வந்து முடிந்த அளவிற்கு அதிகமான புத்தகங்களை வாங்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply