சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் திருச்சுழியில் (27.02.2023) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான, தமிழக அரசின் சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இன்றைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.அந்த வகையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, இன்று காரியாபட்டி மற்றும் திருச்சுழியில் நடைபெறும் சமுதாய வளைகாப்பு விழாவில், 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வளைகாப்பு என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நடத்தப்படும் ஒரு சம்பிரதாயம் ஆகும். அனைத்து சமூகங்களிலும் சாதி, மத, இன வேறுபாடின்றி கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது. கருவில் வளரும் குழந்தையை குடும்பத்தினர் அனைவரும் வரவேற்கும் விதமாகவும், கர்ப்பிணி பெண்ணை சந்தோஷமான மனநிலைக்கு உட்படுத்தி, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பதற்கு இவ்விழா நடத்தப்படுகிறது.இந்த விழாவின் சந்தோஷம் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், ஒரு கர்ப்பிணி கூட குடும்ப சூழ்நிலையினால் சந்தோஷமான உணர்வினை அனுபவிக்க முடியாமல் போய் விடக்கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டமாகும்.ஒரு பெண்ணின் கர்ப்பம் தரித்த நாள் முதல் குழந்தை பிறந்து 2 வயது வரை இடைப்பட்ட முதல் 1000 பொன்னான நாட்கள், ஆரோக்கியம் மற்றும் வளமிக்க எதிர்காலத்தை உருவாக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் வழித்தடமாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி உள்ளது.
பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பகால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணித் தாய்மார்களை சென்றடைய செய்து, அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துதல், மகப்பேறு உதவித் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் மற்றும் சிசு மரணத்தை குறைத்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உயர்த்துதல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், குழந்தைகளின் வளர்ச்சிப் படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள் இணை உணவின் அவசியம், குழந்தைகள் நோய் வாய்ப்படும் போது அளிக்கப்பட வேண்டிய கவனிப்பு போன்ற பல விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கமாகும்.இன்று கர்ப்பிணி பெண்களுக்கு தமிழகஅரசு சார்பில் 5 வகையான கலவை சாதம், பூமாலை, வளையல், மஞ்சள், பழங்கள் மற்றும் சீர்தட்டுகள் வழங்கப்படுகிறது.
எனவே, இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பணிதாய்மார்களும், இந்த கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர்(ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) திருமதி செ.இராஜராஜேஸ்வரி, காரியாபட்டி பேரூராட்சி தலைவர் திரு.செந்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் திருமதி சு.சுகமதி(காரியாபட்டி), திருமதி பங்கஜம்(திருச்சுழி(பொ)), முன்னாள் திருச்சுழி ஊராட்சி ஒன்றிக்குழுத்தலைவர் திரு.பொன்னுதம்பி, முக்கிய பிரமுகர் திரு.செல்லம், திரு.தங்க தமிழ்வாணன், திரு.சந்தனபாண்டியன், திரு.சிவசக்தி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply