மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.16 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (08.09.2026) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.16 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் சமூக சமநிலையுடன் வாழவும், பிறர் துணையின்றி தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளவும் தன்னம்பிக்கையுடன் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தந்திடும் வகையில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. மேலும், அவர்களின் நலன் கருதி கோட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படைத் தேவைகளான உதவி உபகரணங்கள், சுய தொழில் தொடங்கிட மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் உதவி, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை, மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் போன்றவற்றிற்கான மனுக்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வு காணப்படும்.
மேலும், வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம், இலவச வீட்டு மனைப்பட்டா, தாட்கோ, மாவட்ட தொழில் மையம் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுதவி போன்றவற்றிற்கான மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.அதனடிப்படையில் இன்று நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 203 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேலும், ரூ.1.85 இலட்சம் மதிப்பிலான செயற்கைக் கால் 1 மாற்றுத்திறனாளிக்கும், ரூ.26,000 மதிப்பீட்டில் காதொலி கருவிகள் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், ரூ.2,400 மதிப்பிலான கால் தாங்கிகள் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், ரூ.3,000 மதிப்பிலான மடக்கு குச்சிகள் 2 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,16,400 மதிப்பீட்டிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேலும், முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு கண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முகாமில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி ப்ரிதௌஸ் பாத்திமா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி மோகனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் திரு.பிரம்ம நாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply