இந்திய சுதந்திரப் போரட்டம் தொடர்பான பொருட்கள் இருப்பின் நன்கொடையாக வழங்கலாம்
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும், பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 75-வது சுதந்திர தின விழா உரையின் போது அறிவித்துள்ளார்கள்.சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹ{மாயுன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் அரசு அருங்காட்சியகங்கள் துறையின் மூலம் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது.
ஆகையால், விருதுநகர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தங்களிடமுள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ. சீருடைகள் மற்றும் ஐ.என்.ஏ. அஞ்சல் தலைகள் போன்ற சுதந்திரப்போராட்டம் தொடர்பான அரும்பொருட்கள் இருப்பின் அன்பளிப்பாக கொடுத்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.அவ்வாறு, தங்கள் கைவசமுள்ள அரிய பொருட்களை சென்னை அரசு அருங்காட்சியகம் (பாந்தியான் சாலை, எழும்பூர்-08)அல்லது விருதுநகரிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் (40/1, லிங்க் ரோடு, வி.வி.ஆர். அரங்கம், விருதுநகர்-01, அலைப்பேசி-99944-59521) வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையர் அவர்களால் வழங்கப்படும்.
இவ்வாறான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் பொழுது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும். ஆகவே விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் தங்களிடமுள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை கொண்டு அமையவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
0
Leave a Reply