பாசிப்பருப்பு அல்வா (Moong dal Halwa).
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு (Moong Dal): 1 கப் (250 கிராம்),
நெய்: 3/4 கப் முதல் 1 கப் வரை,
சர்க்கரை: 1 முதல் 1 1/4 கப் வரை,
ரவை (Semolina): 1 டேபிள் ஸ்பூன் (அல்வா பொலபொலப்பாக வர),
கோதுமை மாவு: 1 டேபிள் ஸ்பூன்,
பால் அல்லது நீர்: 1.5 கப் (தேவைக்கேற்ப),
ஏலக்காய் தூள்: 1/4 டீஸ்பூன்,
முந்திரி, பாதாம், பிஸ்தா: சிறிதளவு (நெய்யில் வறுத்தது).
செய்முறை:
பாசிப்பருப்பை 2 அல்லது 3 முறை நன்றாகக் கழுவிவிட்டு, குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.
ஊறிய பருப்பில் உள்ள தண்ணீரை முழுமையாக வடித்துவிட்டு, மிக்ஸியில் சேர்த்துக்கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்க்காமல், சற்று கொரகொரப்பாக (நைசாக இல்லாமல்) அரைத்து எடுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து2 ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். அதே கடாயில் மீதமுள்ள நெய்யில் ரவை மற்றும் கோதுமை மாவு சேர்த்து லேசாக வறுக்கவும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பு விழுதைச் சேர்த்து மிதமான தீயில் தொடர்ந்து கிளறவும். பருப்பு நெய்யை உறிஞ்சி, நிறம் மாறி, நல்ல வாசனை வரும் வரை அடிபிடிக்காமல் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பருப்பு நன்றாக வதங்கிய பிறகு, சூடான பால் அல்லது தண்ணீர் சேர்த்து கட்டி தட்டாமல் நன்றாகக் கிளறவும்.கலவை வெந்த பிறகு சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும். சர்க்கரை உருகி அல்வா பதத்திற்கு வரும்போது ஏலக்காய் தூள் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரியைச் சேர்க்கவும்.
கலவையானது கடாயில் ஒட்டாமல் ,நெய் பிரிந்து மேலே வரும் பக்குவத்தில் அடுப்பை அணைக்கவும். சுவையான மூங்தால் அல்வா தயார்.
0
Leave a Reply