வெறுப்பை வளர்க்காதீர்கள் .
நாம் வாழும் நாட்களில் பல விஷயங்கள் நடக்கின்றன. எல்லாமே நமக்கு சாதகமாக அமையும் என்று சொல்ல முடியாது. பலர் நம் மனதை வேதனைப்படும்படி பேசுவார்கள். அதற்காக வருடக் கணக்கில் அதையே நினைத்து வேதனைப்பட்டு வெந்து மடிவது சரியா? நீங்களே யோசித்துப் பாருங்கள். என்றோ ஒரு நாள் பள்ளிக் கூடத்தில் படிக்கும் காலத்தில் நம்முடன் படித்தவர்களில் ஒருவர் நம்மைப் பார்த்து உனக்கு "கொஞ்சமாவது அறிவு இருக்கா? லூஸு" என்று சொன்னது, நம்முடைய 80 வயது வரை அதை நினைத்து, என்னைப் பார்த்து இப்படிச் சொன்னானே? என்ற வெறுப்புணர்வு, கம்ப்யூட்டர் டேடா சிப்ஸில் ஸ்டோர் செய்தது போல, டெலிட்டே ஆகாது.
இதனால் யாருக்கு லாபம்? நஷ்டம் தான். எப்படி? அதையே நினைத்து வயிறு எரிவதால் இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி என்று கூடிக் கொண்டே போகும். சொந்தக் காரர்கள், நண்பர்கள், யாராவது நம்மை சொல்லிலோ, செயலிலோ அவமதித்தால் நமக்கு எப்படி இருக்கும். ரெம்ப வருத்தமாக இருக்கும். மனதில் அதை வைத்து வேதனைப்பட்டுக் கொண்டே இருந்தால் நமக்குள் நல்ல புத்தி போய் குரோதம் வளர்ந்து விடும். அதான் நம் தமிழ் சேனல் சீரியல்களில் காண்பிக்கிறார்களே! 'பல்லுக்குப் பல்', 'கண்ணுக்கு கண்' என்று போனால் ‘எங்கே நிம்மதி' என்று அலைய வேண்டியது தான்.
பெற்றோர்களே, சரியாகப் படிக்காத. குழந்தைகளைப் பார்த்து நீ, ஆடு,மாடு மேய்க்கத்தான் லாயக்கு! உன் தம்பி, தங்கையைப் பார், கை நிறைய சம்பளத்தோடு வருகிறார்கள் என்று வார்த்தைக்கு வார்த்தை மட்டம் தட்டியே பேசுவார்கள். குழந்தைகளும் பெற்றோர்களிடத்தில் வெறுப்புணர்வை வளர்த்துக் கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட பெற்றோர்களின் அந்த குழந்தை சிறிது வித்தியாசமாக வெறுப்பை வளர்க்காமல் ஆடு, மாடுகளை வளர்த்து பால் கறந்து அதை விற்று பின் பாக்கெட் பால் போட்டு விற்று பெரிய கோடீஸ்வரன் ஆகி விடுகிறான். இவன் தம்பி, தங்கைகளுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு பணக்காரன் ஆகி விடுகிறான். காரணம் வெறுப்பை வளர்க்காமல் அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டு செயலில் ஈடுபடுவதால் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.
எந்த மாதிரி, மனக் காயங்களுக்கும் அருமருந்து மறப்பதும், மன்னிப்பதும் தான். மன உளைச்சலைத் தரும் எந்த விஷயத்தையும் மீண்டும் தீண்டாமல் இருப்பது மிக மிக முக்கியம். மனதைக் காயப்படுத்தி பேசுபவர்கள், நம் மீது உள்ள பொறாமையினால்தான் அப்படிப் பேசுகிறார்கள். 'பாவம்! அது அவர்களுடைய அறியாமை' என்று நினைத்தாலே போதும். 'மனதில் உள்ள காயங்கள்' என்ற கசடு அறவே ஒழிந்து போகும்.
வீட்டில் மருமகள் வந்ததும் தன்னுடைய அதிகாரம் படிப்படியாகக் குறைந்து போகின்றது, என்று நினைக்க ஆரம்பிப்பதால் வெறுப்பு வளருமே தவிர நிம்மதி இராது.நாமும் ஒரு நாள் மருமகளாக இருந்து மாமியார் ஆனவர் தானே! நம் மாமியாரிடம் இருந்து நாம் அதிகாரத்தைப் பெறவில்லையா? அது மாதிரி தான். இது ஒரு வாழ்க்கைச் சக்கரம் என்று நினைப்பதால் எவ்வளவு நன்மை. இதெல்லாம் சரிபட்டு வருமா? என்று கேட்காதீர்கள். அதிகாரத்தை மருமகளிடம் கொடுத்து விட்டு, 'அப்பாடி' என்று ஏன் இருக்கக் கூடாது? நிம்மதி தானே! முயன்று பாருங்கள். முடிவு இனிக்கத்தான் செய்யும்.
சரி என்று மருமகளிடம் அதிகாரத்தைக் கொடுத்து விட்டு அதை எப்படிச் செய்கிறாள்? என்று நோட்டம் செய்து இப்படி செய்யக் கூடாது? என்று மூச்சு விடக் கூடாது. பல விஷயங்கள் காலத்திற்கு ஏற்றாற்போல மாறுபடும். அந்தக் காலத்திலே நாங்கள் எல்லாம் மாமியாருக்கு பயப்படுவோம் என்று பூச்சாண்டி காட்டினால் மருமகள் இந்த காலத்தில் நீங்கள் எங்களுக்குத் தான் பயப்பட வேண்டும் என்று நையாண்டி செய்வார்கள். இது தேவையா? ஒதுங்குவது எவ்வளவோ மேல்.
அனைவரையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உணர்வைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள். எடுத்ததற்கெல்லாம் குற்றம் குறை கூறிக் கொண்டு வெறுப்பை வளர்க்காதீர்கள். அப்படிச் செய்தாலும் மற்றவர்கள் நம்மை ஏளனமாகப் பார்த்தாலும் 'பாவம்' பிறவி இங்கிதம் தெரியாமல் இப்படிப் பேசுகிறார்கள், செயல்படுகிறார்கள் என்று ஒதுக்கி விட்டு வெறுப்பை வளர்க்க விடாதீர்கள்!
திருமதி. குணா பாஸ்கர் ராஜா.
0
Leave a Reply