வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் வலையபட்டி கிராமத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம்
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், வலையபட்டி கிராமத்தில், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் (23.11.2024) நடைபெற்றது.
இக்கிராமசபைகூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல் குறித்தும்,கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தல் குறித்தும்,தூய்மை பாரத இயக்க(ஊரகம்) திட்டம் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், குறித்தும், ஜல் ஜீவன் இயக்கம் குறித்தும், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் குறித்தும், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு குறித்தும், கூட்டாண்மை வாழ்வாதாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.நமது மாவட்டத்தில் இருக்ககூடிய 450 கிராம ஊராட்சிகளில் ஒவ்வொரு வருடமும் தற்போது 6 நாட்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
கிராமத்தில் ஊராட்சி சார்பாக பல்வேறு வளர்ச்சி பணிகளும், சுகாதார பணிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதா, தினசரி தூய்மை பணியாளர்களின் பணி தொடர்ச்சியாக நடைபெறுகிறதா எனவும், தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கும் வகையில் அந்த ஊராட்சிகளில் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கிறோமா எனவும், ஊராட்சியின் நிதி ஆதாரங்கள் குறித்து நாம் அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும். அரசின் திட்டங்கள் மக்களுக்கு முறையாக கிடைக்கப்பெறுகிறதா எனவும், அரசால் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு பணிகள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா எனவும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் மூலம் அனைவரும் வேலை செய்வதற்கான அடையாள அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதா எனவும், கிராமத்தில் நீர் நிலைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட கிராம வளர்ச்சிக்கு தேவையான செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதே இந்த கிராம சபை கூட்டத்தின் நோக்கமாகும்.
நாம் ஒவ்வொரு நாளும் உருவாக்கக்கூடிய குப்பைகள், கடைகளில் இருந்து உருவாக்கக்கூடிய குப்பைகள் முறையாக நாம் அப்புறப்படுத்தி பராமரிக்கப்பட வேண்டும்.குப்பைகள் பொது இடங்களில் தேங்கி கிடந்தால் நோய் பரவும் அபாயம் ஏற்படும். குப்பைகள் மண்ணின் தன்மையை பாதிக்கும். அதனால், தூய்மைப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து, குப்பைகளை முறையாக மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என்று பிரித்து சரியாக கொடுக்க வேண்டும். கிராமங்களின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். மேலும், பொதுமக்கள் அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து செயல்பட்டால், ஒரு கிராமம் முன்னேறும், ஒரு நகரம் முன்னேறும், ஒரு நாடு முன்னேறும். இந்த நிகழ்ச்சியின் நோக்கமும் இது தான்.
மேலும், இந்த கிராமத்தில் இருக்கக்கூடிய பொதுவான பிரச்சனைகளை கூறி விவாதித்து முடிவுகளை எடுப்பதற்கும் இந்த கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. எனவே இந்த கிராம சபையில் எடுக்கக்கூடிய தீர்மானங்கள், விவாதிக்கக் கூடிய விவாத பொருட்களை, பொதுமக்கள் பங்களிப்போடு விவாதம் செய்து, அதில் முடிவுகள் எடுக்கவும், புதிய திட்டங்களுக்கான முன்மொழிவுகளை கருத்துக்களை தெரிவிக்கவும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கால்நடைத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து தெரிந்து கொள்ளும் விதமாக விரிவாக எடுத்துரைத்தனர்.
முன்னதாக, தூய்மை பணியாளர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி பணியாளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தார்.இக்கூட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா. ராஜேந்திரன், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.அரவிந்த் உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், கிராம பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply