வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் நபார்டு வங்கி இணைந்து வேளாண் உட்கட்டமைப்பு நிதி குறித்த கருத்தரங்கம் .
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஸ்ரீஅம்பாள் கிராண்ட் திருமண மண்டபத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மற்றும் நபார்டு வங்கி இணைந்து வேளாண் உட்கட்டமைப்பு நிதி குறித்து 9 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
மத்திய அரசு, அறுவடைக்கு பிந்திய வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட நீண்ட கால கடன் வசதி திட்டமாக வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளில் (2020-2021 முதல் 2032 - 2033 வரை) வங்கிகள் மூலம் பிணையமற்ற குறைந்த வட்டியிலான கடன் வழங்கப்படுகிறது.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 2025-2026 நிதியாண்டுக்கு ரூ.26 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனாளிக்கு அதிக பட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கிறது. 7ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3% வட்டிக்குறைப்பு (Interest Subvention) வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், மின் சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்புக்கிடங்குகள், சேமிப்பு கலன்கள் (Silos), சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள், போக்குவரத்து வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள் மற்றும் பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள் போன்ற பல்வேறு அறுவடைக்குப்பின் வேளாண்மைக்கான உட்கட்டமைப்புகள், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன மற்றும் துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள், பகுதிக்கேற்ற பயிர் தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கு கடன் வசதி பெற முடியும்.இந்த உட்கட்டமைப்புகளை உருவாக்க முன்வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் கூட்டுப் பொறுப்பு குழு (JLG), பல்வகை கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், புதியதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்களுக்கும், மத்திய, மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகளுக்கும் கடன் வசதி செய்து தரப்படுகிறது.
இக்கருத்தரங்கில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், நபார்டு வங்கி, முன்னோடி வங்கி, கூட்டுறவுத்துறை, மாவட்ட தொழில் மையம் அலுவலர்கள் மற்றும் திட்ட அலுவலர் மகளிர் திட்டம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் வேளாண்மை இணை இயக்குநர் திருமதி மு.சுமதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.மேலும் இக்கருத்தரங்கில் வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) திருமதி எம்.செல்வி, மாவட்ட வளர்ச்சி மேலாளர்(நபார்டு) திருமதி.அனுசா எலிசபெத், வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி அ.அம்சவேணி, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி எஸ்.சுபா வாசுகி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ஆர்.பாண்டிசெல்வன், இணைப்பதிவாளர்(மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) திரு.ஜீவா, துணை இயக்குநர்(மாவட்ட தொழில் மையம்;) திரு.வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம் தொடர்பாக விரிவான திட்ட விளக்க உரையாற்றினார்கள்.
மேலும் இக்கருத்தரங்கில் விவசாயிகள், வங்கியாளர்களுடன் இணைந்து வேளாண் உட்கட்டமைப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் வேளாண் உட்கட்டமைப்புகளை உருவாக்க முன்வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், தனிப்பட்ட முன்னோடி விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் கூட்டுப் பொறுப்பு குழு, பல்வகை கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், புதியதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் உறுப்பினர்கள் என சுமார் 140 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
0
Leave a Reply