25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள விருதுநகர் அரசு அருங்காட்சியகம் புதிய கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள விருதுநகர் அரசு அருங்காட்சியகம் புதிய கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (26.02.2026) காணொலி காட்சி வாயிலாக, விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மற்றும் அருங்காட்சியகங்கள் துறை சார்பில் ரூ.12.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விருதுநகர் அரசு அருங்காட்சியகம் புதிய கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள்,  சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும்  சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் அருங்காட்சியகத்தின் பயனைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், இதுவரை 23 மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் விருதுநகர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கக் கட்டடத்தில் வாடகையில் இயங்கி வந்த விருதுநகர் அருங்காட்சியகத்திற்கு, தற்போது ரூ.12.43 கோடி மதிப்பில் சொந்தக் கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அருங்காட்சியகம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில், 13,159.30 சதுர அடி நிலப்பரப்பில் அமைந்துள்ளது.தரை தளத்தில் அறிமுகக் காட்சி கூடம், மாவட்ட முக்கிய தலைவர்கள் விவரங்கள், இயற்கை வரலாறு, தொல்லியல், வரலாறு மற்றும் சமூக பண்பாட்டு வரலாற்றுக் காட்சிக்கூடங்கள் உள்ளன.முதல் தளத்தில் அலுவலக அறைகள், காப்பாட்சியர் அறை, சிறப்பு கண்காட்சி அறை மற்றும் நவீன AV கூட்டரங்கமும், இரண்டாம் தளத்தில் அரிய பொருட்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான வைப்பு அறையுடன், வளாகத்தில் தனித்தனியான கழிவறை வசதிகள் மற்றும் சிற்றுண்டி உணவகமும் அமைக்கப்பட்டுள்ளன.இந்த அருங்காட்சியகம் மாவட்டத்தின் நிலவியல் முதல் மானுடவியல் வரை பல்வேறு பிரிவுகளில் அரிய பொருட்களைக் கொண்டுள்ளது.தொல்லியல் சான்றுகளான பூர்ணச்சந்திராபுரம் மற்றும் ஆலமரத்துப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட நுண்கற்காலக் கருவிகள், முத்தார்பட்டி மற்றும் ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட ஊர்களில் கிடைத்த முழுமையான முதுமக்கள் தாழிகள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகளான சாத்தூர் நென்மேனி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட, கி.பி. 823-ஆம் ஆண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்துக் கல்வெட்டு இங்குள்ள முக்கிய ஈர்ப்பாகும். இது பண்டைய நீர்ப்பாசன முறையின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.மேலும், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்கள், நடுகற்கள் மற்றும் சதிக்கல் சிற்பங்கள் கற்சிலைப் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.பாறை வகைகள், படிமங்கள், பதப்படுத்தப்பட்ட பறவைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள், ஓலைச்சுவடிகள், நாணயங்கள் மற்றும் பழியர் பழங்குடியினரின் புழங்கு பொருட்கள் எனப் பலதரப்பட்ட இயற்கை மற்றும் பண்பாடு சேகரிப்புகள் உள்ளன.பொதுமக்களும், மாணவர்களும் மாவட்டத்தின் வரலாற்றையும், இயற்கையையும் ஒரே இடத்தில் அறிந்துகொள்ளும் வகையில் சிறந்த கல்வி மையமாக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், அருங்காட்சியக காப்பாட்சியர் திரு.பால்துரை, விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.        

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News