மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவிலில் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உட்கட்டமைப்பு வசதிகளை பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முடி காணிக்கை மண்டபம், அன்னதான மண்டபம், விருந்து மண்டபம், 235 கடைகள் உள்ளிட்ட பல்வேறு புதிய உட்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் குத்துவிளக்கேற்றி, புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, திருக்கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், பழமையான திருக்கோவில்களின் ஆன்மிகப் பெருமையையும் பாதுகாத்து, அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவில் தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது. இத்திருக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவிழா மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, பக்தர்கள் நேர்த்திக்கடனான முடி காணிக்கை செலுத்துவதற்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நவீன வசதிகளுடன் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபமும், திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட முறையில் சுகாதாரமான மற்றும் வசதியான முறையில் அன்னதானம் வழங்கும் வகையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அன்னதான மண்டபமும்,திருக்கோவில் சார்ந்த நிகழ்வுகள், தனியார் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படும் வகையிலும் ரூ.8.44 கோடி மதிப்பீட்டில் விருந்து மண்டபமும், திருக்கோவில் வளாகத்தில் உள்ள வணிக நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படுவதுடன், பக்தர்களுக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் எளிதாக வாங்கிக் கொள்ளும் பொருட்டு ரூ.12 கோடி மதிப்பீட்டில் 235 கடைகளும் என மொத்தம் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் புதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டதன் மூலம், அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மற்றும் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. மேலும், திருக்கோவில் வளாகத்தின் பயன்பாட்டுத் திறன் மேம்படுவதுடன், பக்தர்களின் வருகையை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு தேவையான சேவைகளை ஒருங்கிணைந்த முறையில் வழங்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்வில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் திரு.ராமமூர்த்தி, செயல் அலுவலர் திரு.இளங்கோ, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், திருக்கோவில் நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply