இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்திலுள்ள T.புனவாசல் கண்மாய்க்கு பாசன வசதி அளிக்கும் வகையில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், கீழ்செம்பூர் கிராமத்தில் கிருதுமால் ஆற்றின் குறுக்கே இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்திலுள்ள T. புனவாசல் கண்மாய்க்கு பாசன வசதி அளிக்கும் வகையில், ரூ.9.27 கோடி மதிப்பீட்டில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கிருதுமால் நதியின் குறுக்கே அமைந்துள்ள கீழப்பருத்தியூர் அணைக்கட்டு மற்றும் கல்லிக்குளம் அணைக்கட்டுக்கு இடையில் விவசாய பெருங்குடி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே மண்கரை அமைத்து வு.புனவாசல் கண்மாய்க்கு பாசன நீர் எடுத்துச் சென்று கொண்டிருந்த நிலையில் அணைக்கட்டு கட்டுமானம் அமைத்து நிரந்தரமாக எவ்வித தடங்கலின்றி T. புனவாசல் கண்மாய்க்கு பாசன நீர் எடுத்துச் செல்ல விவசாய பெருங்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பரிந்துரையின் பேரில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கையில் பாசன திட்டங்களின் கீழ் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களால் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.9.27 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் அவர்களால் 29.01.2025 இன்று கீழ்செம்பூர் அணைக்கட்டு கட்டுமான பணிகள் துவக்கப்பட்டு, தற்போது பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
மேலும், குண்டாற்றின் உப நதியான கிருதுமால் நதியானது துவரிமான் கண்மாய் பாசன நிலங்களின் மழைநீர் வடிகாலாக ஆரம்பித்து வழியிலுள்ள மாடக்குளம் போன்ற கண்மாய்களின் உபரி நீரோடு மழை நீரையும் சேர்த்து மதுரை மாநகரப் பகுதிகள் வழியாக ஊடுருவி சென்று சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் வழியாக சென்று குண்டாற்றில் கலக்கிறது.பின்னர், வைகையாற்றின் குறுக்கே அமைந்துள்ள விரகனூர் மதகு அணையின் மேற்புறம் அமைந்துள்ள வெள்ளநீர் போக்கியின் தலைமதகின் வழியே, வெள்ளக்கால்வாய் மூலம் வைகை ஆற்றின் வெள்ள நீர் கிருதுமால் ஆற்றில் பெறப்பட்டு சிவகங்கை மாவட்டத்தில் 18 கண்மாய்களும், விருதுநகர் மாவட்டத்தில் 50 கண்மாய்களும், மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 7 கண்மாய்களும் மொத்தம் 75 கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு அதன் மூலம் 18,775 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகிறது.
இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் T. புனவாசல் கிராமம், கீழப்பருத்தியூர் கிராமம், கீழ்செம்பூர் கிராமம், மேல்செம்பூர் கிராமம் மற்றும் வீரசோழன் கிராமம் ஆகிய 5 கிராமங்களின் மூலம் 237.39 ஹெக்டேர் (586.35 ஏக்கர்) பாசன பரப்பு பயன்பெறுவதுடன். நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்து கிணறு மற்றும் ஆழ்துளைக்கிணறு நிரம்பி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் பிரச்சனை தீர்வதுடன் இப்பகுதி கிராம மக்களின் வாழ்வாதாரம் உயரும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, காரியாபட்டி உதவி செயற்பொறியாளர்கள் (நீ.வ.து) திரு. கி.முத்துசாமி, திரு.மு.அழகு சுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply