7 கண்மாய் மற்றும் 1 கண்மாய் வரத்துக் கால்வாய் புனரமைத்தல் பணிகளை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், ஆனைக்குளம் கிராமத்தில்( 30.01.2026) நீர்வளத்துறை குண்டாறு வடிநிலக் கோட்டம், மதுரை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் உள்ள வக்கணாங்குண்டு, முஷ்டக்குறிச்சி, மானூர், மறையூர், வீரக்குடி, மேலப்பருத்தியூர், நாலூர் கண்மாய்கள் மற்றும் ஆனைக்குளம் கண்மாய் வரத்துக்கால்வாய் ஆகியவை ரூ.9.50 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு நீர் வளத்தைப் பெருக்குவதற்காக பல்வேறுத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வானம்பார்த்த பூமியான நமது பகுதியில் அடிப்படையான பணியாக விவசாயம் இருக்கிறது. மண்ணையும், மழையையும், நம்பி இருக்கக்கூடிய இந்தபகுதியில் பாசனத்திட்டங்களை பெருக்கக்கூடிய நலத்திட்டங்கள் தேவை என்பதை உணர்ந்து தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் உள்ள வக்கணாங்குண்டு, முஷ்டக்குறிச்சி, மானூர், மறையூர், வீரக்குடி, மேலப்பருத்தியூர், நாலூர் கண்மாய்கள் மற்றும் ஆனைக்குளம் கண்மாய் வரத்துக்கால்வாய் நீண்ட நாட்களாக புனரமைக்கப்படாததால் கண்மாய்களில் உள்ள மடைகள், கலுங்குகள் மற்றும் கரைகள் சேதமடைந்த காரணத்தினால் மேற்கண்ட கண்மாய்களை புனரமைக்க விவசாய பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, புனரமைக்கும் பணிக்கான அரசாணை மற்றும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, இன்று பணிகள் துவக்கப்பட்டுள்ளது. வக்கணாங்குண்டு, முஷ்டக்குறிச்சி, மானூர், மறையூர், வீரக்குடி, மேலப்பருத்தியூர், நாலூர் மற்றும் ஆனைக்குளம் கண்மாய்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலமாக 1620 ஹெக்டேர் (4000 ஏக்கர்) பாசன விளை நிலங்கள் பயன்பெறும்.
மேலும், கண்மாய்களில் முழுகொள்ளளவிற்கு தண்ணீர் சேமிக்கப்பட்டு, கண்மாய்களை சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயரவும். கோடைகாலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை தீர்வதுடன், இப்பகுதி கிராம மக்களின் வாழ்வாதாரம் உயர்வதுடன் கால்நடைகளின் தண்ணீர் தேவைகளும் பூர்த்தியடையும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், நீர்வளத்துறை பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பாசன விவசாயிகள், கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply