சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் ரூ.12.98 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில் ரூ.12.98 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை(24.10.2026) திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திடவும், அனைத்து பகுதிகளும் சரிசமமான வளர்ச்சியினை பெற்றிட வேண்டும் என்பதற்காக ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பள்ளிக்கல்வித்துறை போன்றவற்றின் மூலமாக பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது.கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய பொதுமக்கள் தங்கள் வீட்டு விழாக்களுக்கு தனியார் மண்டபங்களுக்காக அதிக பொருட்செலவு செய்வதனை தடுத்திடவும், குறைந்த கட்டணத்தில் தங்களது பகுதிகளிலேயே விழாக்களை நடத்திக் கொள்வதற்காகவும் சமுதாயக்கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்ந்த தரத்திலான கல்வியினை வழங்கிடவும், பல்வேறு போட்டிகளுக்கு மாணவர்களை தயார் படுத்திடவும், பாதுகாப்பான சூழலில் கூடுதலான இட வசதிகளுடன் மாணவர்களின் மனதிற்கு பிடித்த சூழ்நிலையில் கல்வியினை கற்கச் செய்திட வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித்துறையின் மூலம் ஏராளமான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.குழந்தைகளின் முன்பருவக் கல்வியினை உறுதிப்படுத்திடவும், ஊட்டச்சத்து குறைபாடற்ற ஆரோக்கியமான இளைய தலைமுறையினை உருவாக்கிட வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அதனடிப்படையில் கிருஷ்ணாபுரம் ஊராட்சி கண்மாய்பட்டியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடமும், விருதுநகர் நகராட்சியில் ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வரித்துறை அலுவலகக் கட்டடம், குல்லூர் சந்தையில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடம், கல்லூரணியில் ரூ.66.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிளை நூலகக் கட்டடம், நடையனேரி, வெள்ளையாபுரம், செட்டிக்குறிச்சி, வீரசோழன், சாலை மறைக்குளம் மற்றம் நாலூரில் ரூ.7.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 26 கூடுதல் வகுப்பறைக் கட்டடம் இன்று பொதுமக்கள், மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்களை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி மேம்படுத்திட வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் இணை ஆணையர் (வணிக வரித்துறை) திருமதி கீதா, முதன்மை கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.சண்முகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, மாவட்ட நூலக அலுவலர் திரு.செல்வ சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply