அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157 -வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் (02.10.2025) அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கதர் அங்காடியில் அண்ணல் காந்தியடிகள் 157-வது பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி அண்ணல் காந்தியடிகள் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.
அண்ணல் காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்.கதர் விற்பனை நிலையத்தில் கதர் இரகங்கள், பாலியஸ்டர் இரகங்கள், கண் கவர் பட்டு சேலைகள், பெட்ஷீட்கள், போர்வைகள், மெத்தை, தலையணைகள், தலையணை உறைகள், மெத்தை விரிப்புகள் மற்றும் துண்டு இரகங்கள் தரமான முறையில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.மேலும் அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலக உதவியாளர், ஊர்தி ஓட்டுநர்களுக்கு சீருடை வகைகளும் இவை தவிர அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு 8 தவணைகளில் திருப்பி செலுத்தும் வகையில் தங்களது மாத ஊதிய அளவிற்கு கதர் இரகங்கள் கடனாகப் பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர், பாலியஸ்டர், பட்டுக்கு இரகங்களுக்கு 30 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பொது மக்களும், வாடிக்கையாளர்களும், அலுவலக பெருமக்களும், ஆசிரியர்களும், ஊராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக அளவில் கதர் இரகங்கள் வாங்கி பயன்பெறலாம்.விருதுநகர் மாவட்டத்திற்கு சென்ற ஆண்டு ரூ.75.00 இலட்சம் மதிப்பிலான கதர் துணிகள் விற்பனை செய்து மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தினை பிடித்தது. அதுபோல் 2025-ம் ஆண்டிற்கும் இம்மாவட்டத்திற்கு ரூ.1 கோடி கதர் விற்பனைக்குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு அனைவரும் கதர் மற்றும் பட்டு இரகங்களை காதி கிராப்ட்களில் வாங்கி பயன் பெறுவதுடன் தங்கள் நல் ஆதரவையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, விருதுநகர் இரயில் நிலையம் நுழைவு வாயிலில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பெ.ரா.வெற்றிவேந்தன், மாவட்ட குடிசைத்தொழில் ஆய்வாளர் திரு.தேவராஜ், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், வட்டாட்சியர், கதர் வாரிய பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply