206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம் மற்றும் முழுமையாக பெண் அலுவலர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடி மையத்தினை (பிங்க் பூத்) மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 23.04.2026 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதி 149-ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச் சாவடி மையம் மற்றும் 151-ஷத்திரிய பெண்கள் நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முழுமையாக பெண் அலுவலர்கள் பணியாற்றும் இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி மையத்தினை (Pink Booth) மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (22.04.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில், 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடி மையங்களில் 1,292 அலுவலர்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடி மையங்களில் 1,480 அலுவலர்களும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடி மையங்களில் 1,396 அலுவலர்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடி மையங்களில் 1,392 அலுவலர்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 281 வாக்குச்சாவடி மையங்களில் 1,348 அலுவலர்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடி மையங்களில் 1,296 அலுவலர்களும், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 292 வாக்குச்சாவடி மையங்களில் 1,400 அலுவலர்களும் என மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிளில் 2,001 வாக்குச்சாவடி மையங்களில் 9,604 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மாதிரி வாக்குச்சாவடி மையம்:
மாதிரி வாக்குச்சாவடி என்பது தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களைக் கவரும் வகையிலும், வாக்களிப்பதை எளிமைப்படுத்தும் வகையிலும் சிறப்பாக வடிவமைக்கப்படுவதாகும்.
இந்த வாக்குச்சாவடி முழுவதும் வண்ண அலங்காரங்கள், ஓவியங்கள் மற்றும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகள் இருக்கும். மேலும் நிழற்பந்தல், குடிநீர் வசதி, நாற்காலிகள் மற்றும் கழிப்பறை வசதிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க சாய்தளங்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் சிறப்பு வரிசைகள் இருக்கும்.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் 202-இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி 95-எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி 261-குருநான சம்மந்தர் இந்து உயர்நிலைப்பள்ளியிலும், 204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதி 280-மேலகாந்தி நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியிலும்,
205-சிவகாசி சட்டமன்றத் தொகுதி 57-சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ்.பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், 206- விருதுநகர் சட்டமன்றத் தொகுதி 149-ஷத்திரிய பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி 125-தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதி 44-கலுவனசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் என ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு மாதிரி வாக்குச் சாவடி வீதம் 7-மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி (Pink Booth):
ஒரு வாக்குச்சாவடியின் தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள், காவல்துறை மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் என, அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள். பெண் வாக்காளர்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள், என அனைவரும் எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பாக வாக்களிக்க இது உதவுகிறது.
பிங்க் பூத்களில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, குடிநீர் மற்றும் நிழற்கூடங்கள் போன்றவை உள்ளன. பெண் வாக்காளர்கள் பொது வாக்குச்சாவடியில், நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கலாம். இது பெண்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் 202-இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி 94-ஏ.கே.டி.ஆர்.பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி 259-மகாராஜபுரம் நாகம்மாள் ராஜையா தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதி 201-மேட்டுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும்,
205-சிவகாசி சட்டமன்றத் தொகுதி 239-எஸ்.எச்.என்.பெண்கள் நடுநிலைப்பள்ளியிலும், 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதி 151-ஷத்திரிய பெண்கள் நடுநிலைப்பள்ளியிலும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி 145-கஞ்சநாயக்கன்பட்டி கம்மவார் இந்து தொடக்கப்பள்ளியிலும், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதி 57-காரியாபட்டி அமலா உயர்நிலைப்பள்ளியிலும் என ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு இளஞ்சிவப்பு நிற (Pink Booth) வாக்குச் சாவடி வீதம் மொத்தம் 7-மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம் மற்றும் முழுமையாக பெண் அலுவலர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடி மையத்தினை (பிங்க் பூத்) மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, ஜனநாயகக் கடமையான தேர்தல் பணியில் எவ்விதத் தொய்வுமின்றி செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
0
Leave a Reply