“காபி வித் கலெக்டர்” என்ற 179-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (22.05.2025) அரசு பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 480 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 40-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான 179ஆவது சிறப்பு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் உயர்கல்வி வாய்ப்புகள், தலைசிறந்த கல்லூரிகள், உரிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.மேலும், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.
பள்ளிப்படிப்பை முடித்து சிறந்த கல்லூரிகளில் பயின்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கக்கூடியவர்களின் புள்ளி விவரங்களை சற்று ஆராய்ந்து பார்த்தால், அது அதிக மதிப்பெண்கள் பெற்றவரோ, சராசரியாக படித்தவரோ என எந்தவொரு பொதுப்பண்புகளும் இல்லை. தங்களுக்கான வாய்ப்புகள் குறித்து முன்கூட்டியே சரியான நேரத்தில் விழிப்புணர்வும், அதற்கான முயற்சியும் எடுப்பவரே வெற்றியடைகிறார்கள்.நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு இன்னும் அதிக விழிப்புணர்வு இருந்தால், அவர்கள் நல்ல முடிவு எடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும். மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும்.
ஒரு தெளிவான இலக்கை நிர்ணயிக்கும் போது, அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு நமக்கு எளிதாக இருக்கும். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள். இதிலிருந்து உங்களுக்கான இலக்கை அடைவதற்கு என்ன தேவை என திட்டத்தை வகுத்துக் கொள்வது மிக அவசியம்.11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கின்ற போதே, உயர்கல்விக்கான இலக்கை நிர்ணயித்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.
பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், மாணவர்கள் அனைவரும் தங்களுடைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு, நன்கு படித்து முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply