சோளிங்கரில் உள்ள கடிகாசலம் மலையில் சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயர்காட்சி தருகிறார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள கடிகாசலம் மலையில் யோக ஆஞ்சநேயர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். இவரை அமாவாசையன்று தரிசித்தால் எதிரி தொல்லை, கடன் பிரச்னை, வீண்பயம் நீங்கும்.புராண காலத்தில் வாழ்ந்த வாமதேவர், வசிஷ்டர், கஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர் என்னும் முனிவர்கள் மோட்சம் அடைய விரும்பினர். இதற்காக கடிகாசல மலையில் நரசிம்மரை நோக்கி தவமிருந்தனர். காலன், கேயன் என்னும் அசுரர்கள் அவர்களுக்கு இடையூறு செய்தனர்.இதில்இருந்துமுனிவர்களை விடுவிக்கஆஞ்சநேயரைஅனுப்பியநரசிம்மர், அவருக்குசங்கு, சக்கரத்தையும் கொடுத்தனுப்பினார். சக்கராயுதம் மூலம் அசுரர்களை வதம் செய்தார் ஆஞ்சநேயர்.
இதன் பின் முனிவர்களின் தவம் தடையின்றி நிறைவேறியது. இறுதியில் யோக நரசிம்மர் காட்சியளித்து முனிவர்களுக்கு மோட்சம் அளித்தார். அவரே இந்த மலைக்கோயிலில் யோக நரசிம்மராக அருள்புரிகிறார். 500 அடி உயரமுள்ள பெரிய மலையில் யோக நரசிம்மரின் சன்னதி உள்ளது.மலைக்குச் செல்ல 1305 படிகள் உள்ளன. மலையிலிருந்து 4 கி.மீ. துாரத்திலுள்ள சோளிங்கர் கோயிலில் உற்ஸவரான பக்தவத்சலர், சுதாவல்லித்தாயாருடன் இருக்கிறார். அமிர்தவல்லி தாயாருக்கும் சன்னதி உள்ளது.அமிர்த குளம், தக்கான் குளம் என்னும் தீர்த்தங்கள் உள்ளன.
பெரிய மலைக்கு எதிரிலுள்ள சிறிய மலையில் ஆஞ்சநேயர் கோயில் கொண்டிருக்கிறார். அக்கோயிலை அடைய 406 படிகள் ஏற வேண்டும்.யோகநிலையில் உள்ள ஆஞ்சநேயரின் கைகளில் சங்கு, சக்கரம் உள்ளன. இவரது கண்கள் பெரிய மலையில் உள்ள நரசிம்மரின் பாதங்களை நோக்கியபடி இருப்பது சிறப்பு. மனநோயாளிகள் குணமடையவும், விரும்பிய மணவாழ்க்கை, குழந்தைப்பேறு உண்டாகவும், வியாபாரம் செழிக்கவும் அன்னதானம் செய்கின்றனர். வீடு கட்டும் பணி விரைவில் நிறைவேற மலைப்பாதையில் கற்களை அடுக்குகின்றனர். நினைத்தது நிறைவேற பவுர்ணமியன்று மலையைச் சுற்றுகின்றனர்.
0
Leave a Reply