மலை இருவாட்சி – அருணாச்சலத்தின் மாநிலப் பறவை.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம், 1987-ம் ஆண்டு தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதன் மாநிலப் பறவையாக ‘கிரேட் ஹார்ன்பில்’ எனப்படும் மலை இருவாட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இமயமலையை ஒட்டிய காடுகளில் அதிகம் காணப்படும் இந்தப் பறவைகள், மழைக்காடுகள் மற்றும் ஈரப்பதமான பசுமைக் காடுகளில் வசிக்கின்றன.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பக்கே புலிகள் காப்பகம், மலை இருவாட்சிகளைப் பார்ப்பதற்கான முக்கியமான இடங்களில் ஒன்றாகும்.
- உடல் நீளம் சுமார் 90 முதல் 130 செ.மீ. வரை இருக்கும்.
- இறக்கைகளை விரித்த நிலையில் சுமார் 152 செ.மீ. வரை அகலம் இருக்கும்.
- வால் நீளம் சுமார் 3 அடி வரை வளரக்கூடும்.
- எடை சுமார் 2.5 முதல் 4 கிலோ வரை இருக்கும்.
- உடல் பெரும்பாலும் கருப்பு இறகுகளால் மூடப்பட்டிருக்கும்.
- இறகுகளின் நுனிப்பகுதிகளில் வெள்ளை நிறம் காணப்படும்.
பெண் இருவாட்சிகள், ஆண் பறவைகளைவிட சிறியதாக இருக்கும். ஆண் பறவைகளின் கண்கள் சிவப்பு நிறத்திலும், பெண் பறவைகளின் கண்கள் நீலம் அல்லது மஞ்சள் கலந்த நிறத்திலும் காணப்படுகின்றன.மலை இருவாட்சியின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அதன் பெரிய அலகு. அதன் மேற்பகுதியில் காணப்படும் பெரிய அமைப்பு ‘காஸ்க்’ எனப்படுகிறது.
கடந்த காலங்களில் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருவாட்சியின் அலகு மற்றும் அதனுடன் தொடர்புடைய பகுதிகளைப் பயன்படுத்தி சிறிய கலைப்பொருட்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.அருணாச்சலப் பிரதேசத்தின் நைஷி பழங்குடியின மக்களிடமும் இருவாட்சிக்கு பாரம்பரிய முக்கியத்துவம் இருந்துள்ளது. அதன் இறகுகள் உள்ளிட்ட பகுதிகள் பாரம்பரிய தலைக்கவசங்களில் பயன்படுத்தப்பட்டன.
வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு உள்ளிட்ட காரணங்களால் இருவாட்சிகளுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது அவற்றைப் பாதுகாப்பதில் பழங்குடியின மக்களும் முக்கிய பங்காற்றி வருகின்றனர்
0
Leave a Reply