"தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" மூலம் 3098 குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
தமிழ்நாடு அரசு வலுவான மருத்துவக் கட்டமைப்பு மற்றும் திறமையான மருத்துவப் பணியாளர்களின் மூலம், தமிழ்நாட்டில் தாய் மற்றும் சேய் நலச் சேவைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் தாய்மாமன் ஏற்றுள்ள அன்பும், அக்கறை நிறைந்த பாசமும் பிரதிபலிக்கும் வகையிலும், "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" என்ற சிறப்பு திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல், அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு சராசரியாக 25 முதல் 30 குழந்தைகள் பிறக்கின்றன. விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்திற்காக மொத்தம் 5 வட்டார தலைமை மருத்துவமனைகள் மற்றும் 72 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூன் 22.06.2026 முதல் 27.09.2026 வரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அந்தந்த அரசு மருத்துவமனைகளில் தலா 1 கிராம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 538 குழந்தைகளுக்கும், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 621 குழந்தைகளுக்கும், சிவகாசி அரசு மருத்துவமனையில் 885 குழந்தைகளுக்கும், இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் 551 குழந்தைகளுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 503 குழந்தைகளுக்கும் என மொத்தம் 3098 குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 28.09.2026 முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்லும்போதே தாய்மாமன் தங்க மோதிரம் கொடுத்து அனுப்பி வைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகரைச் சேர்ந்த திருமதி. மெர்லின் ஏஞ்சல் அவர்கள் தெரிவிக்கையில் “எனது குழந்தைக்கு தங்க மோதிரம் கிடைத்த இந்த நாள் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் சிறப்பான நாளாகும். அரசு வழங்கிய இந்த உதவி பொருளாதார மதிப்பை விட எங்களுக்கு அளிக்கும் மகிழ்ச்சியும் அங்கீகாரமும் மிகப்பெரியது. எங்கள் குழந்தையின் மீது அரசு காட்டும் அக்கறையை எண்ணி பெருமையாக உள்ளது. இந்த நல்ல திட்டத்தை செயல்படுத்திய அரசுக்கு எங்களது குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமதி. சங்கீதா அவர்கள் தெரிவிக்கையில்எனது குழந்தைக்கு அரசு சார்பில் தங்க மோதிரம் வழங்கியது எங்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது. குழந்தை வளர்ந்து பெரியவராகும்போது, இந்த மோதிரம் அரசு வழங்கிய அன்பையும் ஆதரவையும் நினைவுபடுத்தும். குழந்தைகளின் நலனை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் அரசுக்கு எங்களது குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தனர்.”இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதோடு, அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்ளும் பெண்களுக்கு அரசு மருத்துவ சேவைகள் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதாகவும், ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் பிறப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்று கௌரவிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது.”
0
Leave a Reply