8 அணிகள் மோதும் டி.என்.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம்.
தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்கு உயர்மட்ட போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுவரை 9 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அதிகபட்சமாக 4 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. கோவை கிங்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகளும் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில், 8 அணிகள் பங்கேற்கும் 10-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நத்தத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. லீக் சுற்று, 'பிளே-ஆஃப்' மற்றும் இறுதிப்போட்டி என விறுவிறுப்பாக நடைபெறவுள்ள இந்த தொடரில் தமிழகத்தின் முன்னணி வீரர்களுடன், வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களும் தங்களது திறமையை நிரூபிக்க களமிறங்குகின்றனர்.
டி.என்.பி.என்.எல். தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) அணிகளில் இடம்பிடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது. மேலும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு இந்திய அணிக்கான கதவும் திறக்க வாய்ப்புள்ளதால், இந்த தொடருக்கு ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் வரவேற்பும் நிலவி வருகிறது.
0
Leave a Reply