அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (29.10.2025) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக 2025 நவம்பர் 4ம் தேதி முதல் வீடு வீடாக கணக்கெடுப்பு படிவ வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும். வாக்காளர்கள் மேற்படி படிவத்தினை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதனுடன் எந்தவொரு ஆவணத்தையும் அப்போது இணைத்து வழங்கத் தேவையில்லை.
வாக்காளர்கள் தங்களது பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், அதன் விபரத்தை கணக்கெடுப்பு படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாத நபர்கள், தங்கள் குடும்ப நபர்கள்/உறவினர்கள் பெயர்கள் 2002 பட்டியலில் இடம் பெற்றிருந்தால், அதன் விபரத்தையும் குறிப்பிடலாம்.கணக்கெடுப்பு படிவங்கள் வழங்குதல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்ப பெறுவது போன்ற பணிகள் 2025 நவம்பர் 4ம் தேதி முதல் 2025 டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறும். இக்காலத்தில் இதுவரை பெயர் சேர்க்கப்படாத நபர்களும் குடியிருப்பு இடம் மாறியுள்ளவர்களும், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ப்பதற்கு முறையே படிவம் 6 மற்றும் 8ஏ அல்லது 8பி ஆகிய படிவங்களில் விண்ணப்பிக்கலாம்.
கணக்கெடுப்பு படிவங்களை கையொப்பமிட்டு அளித்த அனைத்து வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் 2025 டிசம்பர் 9 முதல் 2025 ஜனவரி 8 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோருதல், ஆட்சேபணைகள் தெரிவித்தல், திருத்தம் செய்யக் கோருதல் போன்ற படிவங்கள் / கோரிக்கைகள் பெறப்பட்டு, அப்படிவங்களுடன், ஏற்கனவே பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களின் மீதும் 2025 ஜனவரி 31ம் தேதி வரை விசாரணை செய்யப்பட்டு, பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நல்ல முறையில் நடைபெறுவதற்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகம்து இர்பான்,I A S., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா, தேர்தல் வட்டாட்சியர் திரு.ரமணன், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர், தேர்தல் பணி அலுவலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply