உலக யூத் தடகளத்தில் ஆஷ்பக் தேசிய சாதனை.
அமெரிக்காவில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 21-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் 147 அணிகளைச் சேர்ந்த சுமார் 1,800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் 23 வீரர்கள், 13 வீராங்கனைகள் என 36 பேர் களமிறங்கியுள்ளனர்.
ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் 5-வது பிரிவில் களமிறங்கிய முகமது ஆஷ்பக் 45.81 வினாடிகளில் இலக்கை கடந்து 2-வது இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக 4-வது இடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மேலும், 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அவர் பதிவு செய்த 45.81 வினாடிகள் புதிய தேசிய சாதனையாக அமைந்தது.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் பசந்த் அதிகபட்சமாக 2.14 மீட்டர் உயரம் தாண்டினார். ஒட்டுமொத்தமாக 11-வது இடம் பிடித்த அவர், 13 பேர் பங்கேற்கும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
பெண்களுக்கான வட்டு எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அமனத் கம்போஜ் 53.24 மீட்டர் தூரம் எறிந்தார். இது அவரது சிறந்த செயல்பாடாக அமைந்தது. எனினும், அவருக்கு 6-வது இடமே கிடைத்தது.
0
Leave a Reply