புதிய கல்வியாண்டு தொடக்கம் 1.56 லட்சம் மாணவர்கள் மற்றும் முன்பருவக் குழந்தைகளுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள், சீருடைகள், ஊட்டச்சத்து உணவுகள் தயார்நிலை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு.
விருதுநகர் மாவட்டத்தில் 2026–2027ஆம் கல்வியாண்டு தொடங்குவதை முன்னிட்டு, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள், சீருடைகள் மற்றும் நலத்திட்டப் பொருட்கள் வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அதனைத் தொடர்ந்து, நாளை (04.06.2026) மாவட்டம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களின் இருப்பு மற்றும் விநியோகத் தயார்நிலைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (03.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.1,478 பள்ளிகளைச் சேர்ந்த 1.56 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 990 அரசுப் பள்ளிகள், 454 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 34 பகுதி உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 1,478 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.
இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 76 ஆயிரத்து 156 மாணவர்களும், 80 ஆயிரத்து 596 மாணவிகளும் என மொத்தமாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 752 மாணவ-மாணவிகள் அரசின் இந்த உன்னதமான கல்வி நலத்திட்டங்களால் முழுமையாகப் பயன்பெறவுள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா நலத்திட்டப் பொருட்கள்:
அரசின் கல்வி நலத்திட்டங்களின் கீழ், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கணிதப் பயிற்சி நோட்டுகள், கணித வரைபட நோட்டுகள், ஓவியப் பயிற்சி நோட்டுகள், இரு கோடு மற்றும் நான்கு கோடு நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.
அதேபோல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கிரையான்ஸ் (Crayons), வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டிகள் (Geometry Boxes), காலணிகள், சாக்ஸ்கள், பள்ளிப் பைகள், சீருடைகள், வரைபடப் புத்தகம் (Atlas) மற்றும் பிற கல்வி உதவிப் பொருட்கள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பொருட்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு உரிய காலத்தில் சென்றடையவும், பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்படவும் தேவையான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இல்லம் தேடிச் சென்று ஊக்கமளிக்கும் 72 மாவட்ட அலுவலர்கள்:
விருதுநகர் மாவட்டத்தில் கல்வித் துறையை மேம்படுத்தும் மற்றொரு சிறப்பான நடவடிக்கையாக, அண்மையில் வெளியான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மாணவர்கள் மீண்டும் தேர்வினை எழுதி உடனடியாகத் தேர்ச்சி பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, மாவட்ட அளவில் சிறப்பு அலுவலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்களில் இடம்பெற்றுள்ள 72 மாவட்ட நிலை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட மாணவர்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று, மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் நேரில் சந்தித்து வருகின்றனர். அவர்கள் கல்வியைத் தடையின்றித் தொடர வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதுடன், நடைபெற்று வரும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கவும் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றனர்.
பள்ளி மற்றும் அங்கன்வாடி தொடக்க நாளில் நேரடிக் கண்காணிப்பு:
புதிய கல்வியாண்டின் முதல் நாளான நாளை (04.06.2026), இந்த 72 மாவட்ட நிலை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நேரடியாகச் சென்று, மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் இதர கல்வி நலத்திட்டப் பொருட்கள் முறையாகவும், காலதாமதமின்றியும் விநியோகிக்கப்படுவதை நேரில் கண்காணித்து உறுதி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு குழந்தையும் அரசின் கல்வி மற்றும் ஊட்டச்சத்து நலத்திட்டங்களின் பயனை முழுமையாகப் பெறுவதோடு, புதிய கல்வியாண்டின் முதல் நாளிலிருந்தே எவ்விதக் குறையுமின்றி, சிறந்த கற்றல் சூழலைப் பெறுவதை உறுதி செய்ய விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.
0
Leave a Reply