சென்னை ஓபன் டென்னிஸ்: வைஷ்ணவி, மாயா ரேவதி அசத்தல் வெற்றி.
சென்னையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ. 250 அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சீசன் நடக்கிறது. 'வைல்டு கார்டு' வாய்ப்பு பெற்ற இந்தியாவின் 21 வயது வீராங்கனை வைஷ்ணவி அத்கர், ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பிரிட்டனின் ஜோடீ புரேஜை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 3-6 என இழந்தார் வைஷ்ணவி. பின் சுதாரித்த இவர், அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றினார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது மற்றும் கடைசி செட் 5-5 என இழுபறியானது.
கடைசியில் வைஷ்ணவி 7-5 என செட்டைக் கைப்பற்றினார். 2 மணி நேரம் 44 நிமிடம் நீடித்த இப்போட்டியின் முடிவில் வைஷ்ணவி, 3-6, 6-3, 7-5 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் தமிழக வீராங்கனை மாயா ரேவதி, போலந்தின் கேதர்ஜினா காவாவை எதிர்கொண்டார். இருவரும் தலா ஒரு செட்டை வென்ற நிலையில் கடைசி செட்டில் அனல் பறந்தது. இதில் 3-5 என்று பின்தங்கிய மாயா, இறுதியில் 6-4, 2-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றியைப் பறித்தார். இந்த ஆட்டம் 2 மணி 27 நிமிடங்கள் நீடித்தது.
0
Leave a Reply