ஆதிதிராவிட விவசாயிகள் வளமிகு வேளாண்மை உதவித் திட்டத்தின் கீழ் தட்கல் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் .
வளமிகு வேளாண்மை உதவித்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிட விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாய வருமானத்தை உயர்த்தவும் வழிவகை செய்யப்படுகிறது. விவசாய உற்பத்திக்குத் தேவையான மின் மோட்டார் குதிரைத்திறனுக்கேற்ப மின் இணைப்பு பெறுவதற்கான செலவில் 90 சதவீதம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திடம் தாட்கோ மானியமாக வழங்கும்.
அதன்படி, 5 HP மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.2.50 இலட்சம் எனில், பயனாளி ரூ.25,000/- மட்டும் பங்குத்தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.25 இலட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். 7.5 HP மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.2.75 இலட்சம் எனில், பயனாளி ரூ.27,500/- செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.48 இலட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும்.
அதேபோன்று, 10 HP மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.3.00 இலட்சம் எனில், பயனாளி ரூ.30,000/- மட்டுமே செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.70 இலட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். 15 HP மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.4.00 இலட்சம் எனில், பயனாளி ரூ.40,000/- பங்குத்தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.3.60 இலட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். இத்தொகைகள் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு செலுத்தப்பட்டு, விரைவு மின் இணைப்பு வழங்க பரிந்துரைக்கப்படும்.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிட இனத்தைச் சார்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும், விவசாய நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் சொந்தமாக இருப்பதுடன் அதற்கான பட்டாவும் இருக்க வேண்டும். அந்நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் மின் இணைப்பு கோரி பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் ஏற்கனவே தாட்கோ திட்டங்களின் கீழ் பயன் அடைந்தவராக இருக்கக்கூடாது.
மேற்கண்ட தகுதிகளுடைய ஆதிதிராவிட விவசாயிகள் https://tahdco.com/ என்ற தாட்கோ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply