தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு ஊக்கத்தொகையினை உயர்த்தி அறிவித்தமைக்காக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களிடம் விவசாயிகள் நன்றிகளை தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-இன் கீழ் நெல் மற்றும் கரும்புக்கான மாநில அரசின் ஊக்கத்தொகையினை உயர்த்தி அறிவித்தார்கள்.அதன்படி, விவசாயிகள் நெல் மற்றும் கரும்புகளைப் பயிரிடவும், அறுவடை செய்திடவும், விற்பனை செய்திடவும், தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவிட்டு மேற்கொள்கின்றனர். நெல் மற்றும் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவில் மாநில அரசின் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத் தொகை அதிகரிக்கப்பட்டது.
அதனடிப்படையில், நெல் கொள்முதல் பருவம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்க இருப்பதால் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன், மாநில அரசின் ஊக்கத்தொகையாக சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.289/-ம் மற்றும் பொது ரக நெல் ஒன்றுக்கு ரூ.159/-ம் என உயர்த்தி, சன்னரக நெல் ரூ.2,750/-ம் பொது ரக நெல் ரூ.2,600/-ம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், 2025-26 கரும்பு அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.3,290.50 நிர்ணயம் செய்துள்ளது. அதற்கு மேல் தமிழ்நாடு அரசால் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.709.50 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 கரும்பு விலையாகக் கிடைக்கப்பெறும்.
மாநில அரசு நெல்லுக்கான ஊக்கத் தொகையினை ஓர் ஆண்டில் ரூ.156 மேல் உயர்த்தி வழங்குவதும், கரும்பு சிறப்பு ஊக்கத் தொகையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ஓர் ஆண்டில் ரூ.134-க்கு மேல் வழங்கப்படுவதும் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
மாநில அரசு வழங்கும் நெல் மற்றும் கரும்பிற்கான ஊக்கத்தொகையினை தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு உயர்த்தி வழங்கி, விவசாயிகளை ஒருபோதும் விட்டுவிடாமல் அவர்களோடு தோளோடு தோள் கொடுத்து விவசாயம் சிறக்கவும், ஊரக வாழ்வாதாரம் சிறக்கவும் என்றும் உறுதுணையாக இருக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட விவசாயிகள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்களிடம் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
0
Leave a Reply