லிப்ட் வரலாறு: கயிற்றில் தொடங்கி விண்ணைத் தொடும் பயணம்!
இன்று உயரமான கட்டடங்களில் சில நொடிகளில் பல தளங்களைக் கடந்து செல்ல லிப்ட் நமக்கு உதவுகிறது. ஆனால், இதன் வரலாறு பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்தது என்பது தெரியுமா?
கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே கிரேக்க கணிதவியலாளர் ஆர்க்கிமிடிஸ், கயிறுகள் மற்றும் இயந்திர அமைப்புகளைப் பயன்படுத்தி பொருட்களை மேலே தூக்கும் சாதனத்தை உருவாக்கியதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் ஐரோப்பாவில் உள்ள அரண்மனைகளில், குறிப்பாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில், மனிதர்களையும் பொருட்களையும் மேலே மற்றும் கீழே கொண்டு செல்லும் உயர்த்தி அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன.
பிரான்சில் உள்ள வெர்செய்ல்ஸ் அரண்மனையில், 1743ஆம் ஆண்டு‘பறக்கும் நாற்காலி’ என அழைக்கப்பட்ட ஒரு வகை லிப்ட் அமைக்கப்பட்டது. அதன்பிறகு ரஷ்யாவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் இவான் குலிபின், 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான லிப்ட் வடிவமைப்பை உருவாக்கினார்.
19ஆம் நூற்றாண்டில் நீராவிச் சக்தியில் இயங்கும் லிப்ட்கள் பயன்பாட்டுக்கு வந்தன. லண்டனில் 1823ஆம் ஆண்டு ‘Rising Room’ என அழைக்கப்பட்ட உயர்த்தி அமைப்பு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்தது.
ஆனால், லிப்ட் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது அமெரிக்க கண்டுபிடிப்பாளர்எலிஷா ஓடிஸ் உருவாக்கிய பாதுகாப்பு அமைப்பு.
1853ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற கண்காட்சியில், கயிறு அறுந்தாலும் லிப்ட் கீழே விழாமல் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பை ஓடிஸ் அறிமுகப்படுத்தினார். இந்த கண்டுபிடிப்பே நவீன பயணிகள் லிப்ட் வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக அமைந்தது. பின்னர் அவரது பெயரில் Otis நிறுவனம் உருவானது.
20ஆம் நூற்றாண்டில் மின்சார லிப்ட்கள் வேகமாக வளர்ச்சி பெற்றன. தானியங்கி கதவுகள், அவசர நிறுத்து அமைப்புகள், தொலைபேசி தொடர்பு மற்றும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் படிப்படியாக சேர்க்கப்பட்டன.
இன்று அதிவேக மின்சார லிப்ட்கள், உயரமான கட்டடங்களின் அத்தியாவசிய தொழில்நுட்பமாக மாறிவிட்டன.
கயிறு மற்றும் எளிய இயந்திரத்தில் தொடங்கிய லிப்ட்... இன்று வானளாவிய கட்டடங்களை சில நொடிகளில் இணைக்கும் அற்புதத் தொழில்நுட்பமாக வளர்ந்துள்ளது!
0
Leave a Reply