அரசு மாதிரிப் பள்ளியில் பதினோராம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை ஆய்வு மற்றும் பெற்றோர் - தலைமை ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி பி.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளியில், பதினோராம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான ஆய்வு மற்றும் பெற்றோர் - தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் (22.06.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா . I A S., அவர்கள் தலைமையில் தலைமையில் நடைபெற்றது.
பதினோராம் வகுப்பில் சேரும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் ஆசிரியர்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், மாணவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இப்பள்ளியில் கல்வியுடன் சேர்த்து ஒழுக்கம், தலைமைத்துவ பண்புகள், தகவல் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சிகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி, பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். மாணவர்களின் வருகை, கல்வித் திறன் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்ய பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இடையேயான ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம்.
மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், புத்தகப்பைகள், மதிய உணவுத் திட்டம், காலை சிற்றுண்டித் திட்டம், உயர்கல்விக்கான ஊக்கத்தொகைகள் உள்ளிட்ட அரசின் சிறப்புத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் தற்போது ஸ்மார்ட் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், கணினி வசதிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், விளையாட்டு வசதிகள் மற்றும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இவ்வசதிகளை பெற்றோர்களுக்கு தெளிவாக எடுத்துரைப்பதன் மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கலாம்.
மேலும், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியானது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்து விளங்கிய மாணாக்கர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக் கல்வி வாய்ப்புகளும், போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உரிய திறன் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனை, மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வளர வேண்டும்.
தொடர்ந்து, பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும், புதிய மாணவர் சேர்க்கை நிலவரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, மாணவர் சேர்க்கை இலக்குகளை முழுமையாக எட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply