வேளாண் பணிகளுக்கு குறைந்த வாடகைக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்கள் பெற முன்பதிவு செய்ய உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் மாவட்டத்தில் வேளாண் பணிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மானாவாரி, கிணறு மற்றும் குளத்துப் பாசன விவசாயத்தில், நில உழவுப் பணியிலிருந்து அறுவடை பணிகள் வரை இயந்திரங்களைப் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள ‘வேளாண்மை இயந்திர மயமாக்கல்” பணிகளை வேளாண்மைப் பொறியியல் துறை மேற்கொண்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையில் உழுவை இயந்திரம் 7 எண்களும், மண் தள்ளும் இயந்திரம் 2 எண்களும,; ஜெசிபி இயந்திரம் 2 எண்களும், பொக்லைன் இயந்திரம் 1 எண்ணும் மற்றும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் 1 எண்ணும் அரசு நிர்ணயம் செய்த மிகக் குறைந்த வாடகையில் வாடகைக்கு விடப்பட்டு வருகின்றது.
குறிப்பாக, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் திட்டத்தில், உழுவை இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.500/- க்கும், மண் தள்ளும் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1230/- க்கும், ஜெசிபி இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.890/- க்கும், பொக்லைன் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1910/- க்கும், தேங்காய் பறிக்கும் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.450/- க்கும் (எரி பொருள் மற்றும் ஓட்டுநர் செலவு உட்பட) மிகக் குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் உழுவை இயந்திரங்களில் இணைப்பு கருவிகளாக, சட்டிக் கலப்பை, 5 கொலுக் கலப்பை, 9 கொலுக் கலப்பை, சுழல் கொத்துக் கலப்பை, சோளத்தட்டை அறுவடை கருவி, நேரடி விதை விதைக்கும் கருவி, தென்னை தோகைகளை துகள்களாக்கும் கருவி, வாய்க்கால் வெட்டும் கருவி, வைக்கோல் வாரி, வைக்கோல் கட்டும் இயந்திரம் என பல்வேறு புதிய புதுமையான தொழில்நுட்பக் கருவிகளும், டிராக்டருடன் சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ரூ.500/- எனும் குறைந்த வாடகையில் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. சிறுபாசன திட்டத்தில் நிலத்தடி நீர் ஆய்வு பணிக்கு, ஒரு பணியிடத்திற்கு ரூ.500/- எனும் அரசு நிர்ணயித்துள்ள குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு ஆய்வு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்ட விவசாயிகள், நேரடியாக உழவன் செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களை தங்களது வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்து பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர், அலைபேசி எண்: 82202-53460 ஐயும் திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, வி.பி.எம்.எம் கல்லூரி எதிரில், கிருஷ்ணன்கோவில், அலைபேசி எண்: 79041-25715- யை தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்
0
Leave a Reply