பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு .
விருதுநகர் மாவட்டத்தில் (04.02.2026) தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலைவர் திரு.எஸ்.காந்திராஜன் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார்(வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்), திரு.இராம கருமாணிக்கம்(திருவாடானை சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் திரு.எஸ்.எஸ்.பாலாஜி(திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்) ஆகியோர் பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்கள்.அதன்படி, அருப்புக்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 7.57 கோடி மதிப்பில் தினசரி சந்தை மார்க்கெட் கட்டப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து, உரிய காலத்தில் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்கள்.
பின்னர், அருப்புக்கோட்டை நகராட்சியில் கூட்டுறவுத்துறை சார்பில் அரசு மானியம் பெற்று செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு, மருந்தகத்தின் செயல்பாடுகள், மருந்துகளின் வகைகள், கொள்முதல் செய்யும் முறை, நுகர்வோரை அணுகும் முறை, பொதுமக்கள் பெறும் பயன்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்கள்.தொடர்ந்து, அருப்புக்கோட்டை வட்டம், பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படாத சுரங்கப் பகுதிகளை சீரமைத்து அமைக்கப்பட்டுள்ள ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவினை, நேரில் சென்று பார்வையிட்டு, பூங்காவின் அமைப்பு, வளர்க்கப்படும் மரங்கள், தேவையற்ற கற்கள் மற்றும் உள்ளூர் செடிகளால் உருவாக்கப்பட்டுள்ள கல்பூங்கா, நடைபாதை, அடர்வனம்(மியாவாக்கி) உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கன்னிச்சேரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் கே.புதூர் - சிவகாசி ஒன்றிய சாலையில் அர்ஜுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் பணிகளை முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்கள்.பின்னர், விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட, கோட்டைப்பட்டியில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்கள்.
தொடர்ந்து, விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், கிருஸ்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் கடனுதவி பெற்று, சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வரும் பயனாளியை நேரில் சந்தித்து, தயாரித்து வரும் பொருட்கள், விற்பனை குறித்து கேட்டறிந்து, தொழிலை மேலும் விரிவுபடுத்த அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும், விருதுநகர் நகராட்சியில் நீர்வளத்துறை வைப்பாறு வடிநிலை கோட்டம், விருதுநகர் மூலம் கௌசிகா நதியை ரூ.20.44 கோடி மதிப்பில் புனரமைத்து, நவீனமயமாக்கல் பணி மற்றும் வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளின் தற்போதைய நிலை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்கள்.
0
Leave a Reply