நடைபயிற்சி தரும் ஆரோக்கிய நன்மைகள்.
உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு தினசரி உடற்பயிற்சி மிகவும் அவசியம். நவீன வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு குறைந்து வருவதால் பல்வேறு நோய்களின் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனைத் தவிர்க்க நடைபயிற்சியை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எளிய வழியாகும். நடைபயிற்சி இதயத்தின் செயல்பாட்டை சீராக்குவதுடன், எலும்புகளை வலுப்படுத்தவும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கவும், தசைகளின் வலிமையை அதிகரிக்கவும் உதவுகிறது.
மேலும், இதய நோய், வகை-2 நீரிழிவு, ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. நடைபயிற்சியின்போது இதயத் துடிப்பு சீராகி, நுரையீரலின் செயல்பாடு மேம்படுகிறது. இதனால் உடல் முழுவதும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கிறது.
உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு, மூட்டு மற்றும் தசை தொடர்பான பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் நடைபயிற்சி உதவுகிறது. பொதுவாக, உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தினமும் 30 நிமிடங்கள் நடப்பது அல்லது சுமார் 7 ஆயிரம் அடிகள் நடப்பது பயனுள்ளதாக இருக்கும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் நடைபயிற்சியுடன் கூடுதல் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வது நல்லது.
அதிகாலையில் நடைபயிற்சி செய்ய முடியாதவர்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளிலேயே நடப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கலாம். அலுவலகங்களில் மின்தூக்கியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக படிக்கட்டுகளில் ஏறிச் செல்வது, அருகில் உள்ள இடங்களுக்கு வாகனங்களைப் பயன்படுத்தாமல் நடந்து செல்வது, மலைப்பாதைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றைப் பின்பற்றலாம்.
தினசரி நடைபயிற்சி உடலுக்கு புத்துணர்ச்சியையும் மனதுக்கு அமைதியையும் அளிப்பதுடன், பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நடைபயிற்சியை தினசரி பழக்கமாக்கிக் கொள்வோம்.
0
Leave a Reply