விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்று, பதிவான வாக்குகள் அனைத்தும் 04.05.2026 அன்று விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி (VSVNPC) மையத்தில் எண்ணப்பட உள்ளன.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மரு. என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் என்.ஸ்ரீநாதா, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (01.05.2026) நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 202-ராஜபாளையம், 203-ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), 204-சாத்தூர், 205-சிவகாசி, 206-விருதுநகர், 207-அருப்புக்கோட்டை மற்றும் 208-திருச்சுழி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணி விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக ஒதுக்கப்பட்ட அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டுள்ள 'காப்பு அறைகள்' (Strong Rooms) முதல் வாக்கு எண்ணும் மேஜைகள் வரை அனைத்தும் *சிசிடிவி (CCTV)* கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்ய தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்கு எண்ணும் மையத்தில் சுற்றி மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படை, ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் என 4 அடுக்குப் பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படும் முகவர்களுக்கு இந்த ஆண்டு முதன்முறையாக QR கோடுடன் கூடிய பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. உரிய அடையாள அட்டை இல்லாத எவரும் மையத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன்கள், ஐபேட், லேப்டாப், தீப்பெட்டி, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்துச் செல்ல வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தலா 14 மேஜைகள் வீதம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு மேஜைக்கும் வேட்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முகவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். முகவர்கள் காலை 6:00 மணிக்கே மையத்திற்கு வருகை தந்து தங்களின் வருகையைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
கல்லூரியைச் சுற்றியுள்ள 100 மீட்டர் பகுதி நடைபாதை மண்டலமாக (Pedestrian Zone) மாற்றப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் வாகனங்கள் நுழைய அனுமதி இல்லை. கோடை வெப்பத்தைக் கருத்தில் கொண்டு, முகவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போதிய குடிநீர், நிழற்கூடங்கள், கழிவறை வசதிகள் மற்றும் அவசர கால மருத்துவக் குழுக்கள் ஆம்புலன்ஸ் வசதியுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர்கள் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தனி ஊடக மையம் (Media Centre) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், செய்தியாளர்கள் தடையின்றிப் பணியாற்றத் தேவையான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் முடிவுகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வாக்குகள் எண்ணப்படும் அறைகள் (Counting Halls) தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை பணியை எவ்வித புகார்களுக்கும் இடமின்றி, அமைதியான முறையிலும் ஜனநாயக ரீதியிலும் நடத்தி முடிக்க அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் வட்டாட்சியர் திரு.சீனிவாசன், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
0
Leave a Reply