ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு கடனுதவிகளை அமைச்சர்அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில், (12.03.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவிகள் வழங்கும் விழாவில், நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் 1245 பயனாளிகளுக்கு ரூ.15.48 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.மேலும், 5 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கும், சமுதாய திறன் பள்ளி திட்டத்தின்கீழ் நிறைவு செய்த 120 இளைஞர்களுக்கு சான்றிதழ்களும், 4 சுய உதவிக் குழுக்களுக்கும் மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுகளை நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் 450 ஊராட்சிகளில் 10,347 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. நகர்புறப் பகுதிகளில் 1 மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் மொத்தம் 3,943 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டிற்கு (2025-26) விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.1007 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்க இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு நாளது தேதி வரை 8,948 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.922.38 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, இன்று மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 1245 பயனாளிகளுக்கு ரூ.15.48 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊரகம் மற்றும் நகர்ப்புறப்பகுதிகளில் 54,325 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3787.46 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டு சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையச் செய்திட வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது ஒரு எண்ணிக்கையாக மாத்திரம் இல்லாமல் இது ஒவ்வொரு பெண்கள், தாய்மார்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் தான் இதனுடைய வெற்றி இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கக் கூடிய காரணத்தினால் தான் எப்போதும் இல்லாத வகையில் இந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாபெரும் ஒரு ஆதரவு கரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், இந்த துறையின் அமைச்சர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் நீட்டியிருக்கிறார்கள்.
நிதி அமைச்சர் என்கின்ற வகையில் ஒவ்வொரு மாதமும் நான் வங்கிகளை அழைத்து எவ்வளவு பேருக்கு கடன் வழங்கப்படுள்ளது. வங்கிகள் எந்த வகையில் பெண்களுக்கு ஆதரவு தருகிறீர்கள், மாவட்ட நிர்வாகம் இதை எந்தளவிற்கு ஒருங்கிணைக்கிறது என்பதை முன்னோடி வங்கியுடன் இணைந்து, பல்வேறு வங்கிகளையும் அழைத்து ஆலோசனை செய்து தேவைப்படக் கூடிய அளவிற்கு கடனுதவிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். கடன் பொருளாதாரம் நம் வாழ்க்கையினுடைய முன்னேற்றத்திற்கு ஒரு முக்கியமான பொருளாதாரமாக இருக்கிறது. கடன் பொருளாதாரத்தின் வாயிலாக கடைக்கோடி பகுதிகளில் இருக்கக்கூடிய மகளிரினுடைய முன்னேற்றத்திற்கு நாம் மிகப்பெரிய அளவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.கடன் பொருளாதாரத்தின் வாயிலாக மட்டுமல்லாமல் அவர்களுடைய வாழ்க்கையில் சமூக நிலையிலும் உயர்த்த வேண்டும். பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல சமூக வளர்ச்சியும் அவர்களுக்கு மிக முக்கியமான ஒன்று. பெண்களுக்கான கல்வி, போக்குவரத்து வசதிகளில், சமுதாயத்தில் பெண்களுக்கென்று மிக முக்கியமான இடம் அமைய வேண்டும்.
பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகின்ற போது அந்த பெண் வளரக்கூடிய வளர்ச்சி அந்த பெண்ணிற்கான வளர்ச்சியாக மட்டுமல்ல, அந்த குடும்பத்திற்கான வளர்ச்சியாக மட்டுமல்ல, அந்த பெண் இருக்கக்கூடிய இடத்திற்கான வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் உடைய வளர்ச்சிக்கும் இது ஊன்றுகோலாக அமைகின்ற என்கின்ற வகையில்தான், ஒவ்வொரு திட்டங்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தீட்டுகிறார்கள்.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 1.31 கோடி பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மகளிர் விடியல் பயணம் மூலம் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு பெண்ணும் ஏறத்தாழ ரூ.888 அவர்கள் சேமிக்க முடிகிறது என்பதை இலக்காகக் கொண்டு இந்த பயணம் உறுதி செய்யப்படுகிறது. பெண் பிள்ளைகள் உயர் கல்விக்கு செல்கின்ற பொழுது அவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.காலை வேளைகளில் பெண்கள் எண்ணற்ற வேலைகளை எடுத்துக் கொண்டு செய்கின்ற போது, அவர்கள் வேலைப்பளுவை குறைக்க வேண்டுமென்ற நோக்கில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தின் மூலம் பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதெல்லாம் ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றமாக உருவாக்குவதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இவைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.வளர்ச்சி என்று வருகின்ற பொழுது, அந்த வளர்ச்சி நீடித்த வளர்ச்சியாக இருக்கின்றதா, சுற்றுச்சூழலோடு இணைந்து போகக்கூடிய வளர்ச்சியாக இருக்கின்றதா என்று பார்த்தால், இன்றைக்கு நிதி ஆயோக் நிறுவனம் தேர்ந்தெடுக்கக்கூடிய இலக்குகளில் மிகப்பெரிய அளவிலே முன்னோடியாக இருக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று சொன்னால் சுற்றுச்சூழலோடு இணைந்து இருக்கக்கூடிய பொருளாதார வளர்ச்சியை நாம் இலக்காகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
எனவே அனைவருக்குமான லட்சியம் ஒரு அற்புதமான சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும். முதலமைச்சர் அவர்கள் காணக்கூடிய கனவு பெண்களுக்கான விடுதலை, பெண்களுக்கான தற்சார்பு, கல்வி, கௌரவம், பொருளாதார வளர்ச்சி. பெண்கள் என்று சொன்னால் அந்த பெண்கள் சக்தி என்பதை நாம் நிரூபிக்க கூடிய மாநிலமாக உருவாக வேண்டும் என தெரிவித்தார்.சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்று சுய சார்புடன் தமது சொந்தகாலில் நிற்க வேண்டும் எண்ணத்துடன் அவர்களை ஆற்றல்படுத்திடவும் அதிகாரப்படுத்திடவும், மகளிர் வாழ்வில் உள்ள வறுமை என்னும் இருளை நீக்கி வளம் என்னும் ஒளியை பரவச் செய்வதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசால் மகளிர் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட அமைப்பே தமழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகும். ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களை கண்டறிந்து அவர்களை செய்திடும் நோக்கத்துடன் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறவனமானது மகளிர் திட்டம் என்ற சீரிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில், இன்றைய தினம் காரியாபட்டி நகர்ப்புற பகுதிகளில் உள்ள 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.67 இலட்சம் மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 24 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.31 கோடி மதிப்பிலும், நரிக்குடி ஊரகப் பகுதிகளில் உள்ள 20 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.04 கோடி மதிப்பிலும், திருச்சுழி ஊரகப் பகுதிகளில் உள்ள 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.24 கோடி மதிப்பிலும்,சிவகாசி நகர்ப்புற பகுதிகளில் உள்ள 14 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.88.63 கோடி மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 25 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.48 கோடி மதிப்பிலும், விருதுநகர் என மொத்தம் 19 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.55 கோடி கடனுதவிகளும்.அமுத சுரபி நிதி 293 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.04 கோடி கடனுதவிகளும், வட்டார வணிக வள மையம் மூலம் 16 பயனாளிகளுக்கு ரூ.8 இலட்சமும், சமுதாய முதலீட்டு நிதி 502 குழுக்களுக்கு ரூ.3.14 கோடி கடனுதவிகளும், நலிவு குறைப்பு நிதி 240 பயனாளிகளுக்கு ரூ.67.61 இலட்சம் கடனுதவிகளும், நுண் நிறுவன நிதி 106 பயனாளிகளுக்கு ரூ.65.50 இலட்சம் கடனுதவிகளும், ஆக மொத்தம் 1245 பயனாளிகளுக்கு ரூ.15.48 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இதுபோன்ற, பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் நமக்கு வழங்கியுள்ளனர். இவற்றையெல்லாம் பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply