கால்நடைத் துறையின் சார்பாக - அரசு மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்.
நாட்டுக்கோழி வளர்ப்பானது எளிமையான தொழில்நுட்பங்கள் கொண்டதால் கிராமப்புறங்களில் இத்தொழிலினை வெற்றிகரமாக நடத்த முடியும். இதற்கு மிகக் குறைந்த ஆரம்ப மூலதனச் செலவு போதுமானதாகும். 250 எண்ணம் கோழிகள் கொண்ட ஒரு நாட்டுக்கோழிப்பண்ணையை குடும்ப உழைப்பை மட்டுமே பயன்படுத்தி இலாபகரமாக இயக்க முடியும். இதனால் கூடுதல் மனித சக்தியின் தேவை குறைகிறது. நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு மாநிலம் முழுவதும் நல்ல சந்தை இருப்பதால், பயனாளியே வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் செய்ய முடியும் .
திட்டத்தின் நன்மைகள் :-
நாட்டுக்கோழிகள் 80 முட்டைகள் வரை கொடுக்கும். பயனாளி ஒருவர் 72 வாரங்கள் வரை கோழிகளை வளர்த்து, வருடத்திற்கு 10,000 முடடைகள் ( 125 X 80 ) உற்பத்தி செய்து, அதில் சில முட்டைகளை தாய்கோழிகளைக் கொண்டு குஞ்சு பொரிப்பதற்காக பயன்படுத்தி, குஞ்சுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலமும், மீதமுள்ள முட்டைகளை உண்பதற்கான முட்டைகளாக விற்பனை செய்வதன் மூலமும் மற்றும் வளர்ந்த பெண்கோழிகளை (ம) சேவல்களை இறைச்சிக்காக விற்பனை செய்தும் , ஒரு வருடத்திற்கு ரூபாய் இரண்டு இலட்சம் வரை வருமானம் ஈட்டலாம் .
எனவே, தமிழக அரசினால் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு ) நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் 50 சதவீத மானியத்தில் 10 பயனாளிகளுக்கு 2025-2026 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு அலகிற்கான திட்ட மதிப்பீட்டில் (கோழிகொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு, 4 மாதத்திற்கு தேவையான தீவனச் செலவு) 50 சதவீத மானியமாக ரூ.1,50,625/- யை தமிழக அரசு ( Back Ended Subsidy) வழங்குகிறது. ( 50 சதவீத பயனாளியின் பங்குத் தொகை ரூ.1,50,625/-) இத்திட்டத்தில் பயன்பெற பின்வரும் தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் .
ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணை ஓசூர் / மாவட்ட கால்நடை பண்ணை அபிஷேகப்பட்டி / மாவட்ட கால்நடை பண்ணை சிவகங்கை - யிலிருந்து இலவசமாக வழங்கப்படும் .
கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளாக இருக்க வேண்டும்.
கோழி கொட்டகை சொந்த செலவில் அமைக்க குறைந்த பட்சம் 625 சதுரஅடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும் . இடத்தின் சிட்டா /அடங்கல் நகல் இணைக்கப்பட வேண்டும் . இந்த பகுதி மனித குடியிருப்பிலிருந்து விலகி இருக்க வேண்டும் .
கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை குறித்த 3 நாள் பயிற்சி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் உடன் இணைந்து வழங்கப்படும்.
விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் . தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்டட பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
கடந்த 2022-23 2023 - 24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கான திட்டங்களில் பயனாளி பயனடைந்திருக்கக் கூடாது.
பயனாளி 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும்.
தேசிய மயமாக்கப்பட்ட / திட்டமிடப்பட்ட வங்கி/ கூட்டுறவு வங்கி பயனாளிக்கு நிதியளிக்க தயாராக இருக்க வேண்டும் அல்லது பயனாளி சொந்தமாக முதலீடு செய்ய முன் வந்தால், திட்டத்திற்கு நிதியளிப்பதற்கான அவரது நிதி திறன்களின் ஆதராம் / சான்றுகளை அளிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், திட்டம் தொடர்பாக, தங்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்டம் தொடர்பாக மேலும் விரிவான விபரங்களை தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் பெற்று பூர்த்தி செய்து, ஆதார் அட்டை நகல், நில ஆவண நகல்களுடன் 05.07.2025 -க்குள் கால்நடை உதவி மருத்துவரிடமே சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply