விருதுநகர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம்
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்ட முகாமானது 28.08.2024 இன்று காலை 9 மணி முதல் மறுநாள் 29.08.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமின் கீழ், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று மல்லையநாயக்கன்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், வயதுகேற்ற எடை, உயரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர், புதுப்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.5 இலட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.9.77 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலை கடையினையும் மற்றும் புதுப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.9.85 இலட்சம் மதிப்பில் வகுப்பறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ள பணிகளையும், பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, புதுப்பட்டி நியாயவிலை கடையினை பார்வையிட்டு, குடிமைப் பொருட்களின் இருப்பு, தரம், கைரேகை இயந்திரத்தின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்தும், புதுப்பட்டி கிராமத்தில் உள்ள நூலகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அப்பையநாயக்கன்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.9.45 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலை கடையினையும், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறிய அளவிலான சுகாதார வளாகத்தினையும் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடு கட்டப்பட்டு வரும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.7.50 இலட்சம் மதிப்பில் ஊருணி தூர்வாரப்பட்டு குளியல் தொட்டி மற்றும் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அப்பையநாயக்கன்பட்டி காவல்; நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு; சட்டம் ஒழுங்கு, குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை, அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், சாலைபாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
வீரார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி தரம், கற்பிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்து, பசுமை மன்றம், 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு, புதுமைப் பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பங்களிப்பை வழங்க தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.பின்னர் அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், விருதுநகர் வட்டாரத்தைச் சேர்ந்த 6 பயனாளிகளுக்கு ரூ.1.65 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 2 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும், 1 பயனாளிக்கு உறவு முறைசான்றினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் திரு.செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, வட்டாட்சியர் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply