தூய்மை பணியாளர்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி.வெ.ஆறுச்சாமி அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, ராக்லாண்ட் நினைவு திருமண மண்டபத்தில் (22.01.2026) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி.வெ.ஆறுச்சாமி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப்பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பட்டு கழகம் (தாட்கோ) சார்பில், 40-தூய்மை காவலர்களுக்கு நல வாரிய அட்டைகளையும், 2-தூய்மை காவலர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.1,000/- வீதம் மொத்தம் ரூ.2,000/-னையும், சிவகாசி மாநகராட்சி சார்பில் 370 தூய்மை காவலர் மற்றும் பணியாளர்களுக்கு கையுறை, காலுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி.வெ.ஆறுச்சாமி அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியம் மூலம் நிதியை ஒதுக்கீடு செய்து, அதனை முழுவதும் தூய்மை பணியாளர்கள் நலத்திற்கும், அவர்களின் குழந்தைகளின் கல்விக்கும் தான் செலவழிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.இந்த நலவாரியத்தில் தூய்மைப்பணியாளர்கள் பணியின் போது மரணமடைந்தால் ரூ.5 இலட்சமாக இருந்த தொகையை, ரூ.10 இலட்சம் என உயர்த்தப்பட்டுள்ளது. இயற்கை மரணமடையும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 ஆயிரமாக இருந்த தொகையினை ரூ.1 இலட்சமாகவும், தூய்மைப்பணியாளர் பெண் குழந்தைகளின் திருமணத்திற்கு வழங்கப்பட்டு வந்த ரூ.25 ஆயிரத்தினை ரூ.50 ஆயிரமாகவும், குழந்தைகளின் கல்விக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500/-னை ரூ.3,000/- ஆகவும் உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல், தூய்மைப்பணியாளர் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை, கலைஞர் கனவு இல்லத்தில் சிறப்பு முன்னுரிமை, தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவத்திட்டம் என்று ஒவ்வொரு திட்டமாக தேடிப் பிடித்து உங்களை வாழ வைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு பணியாற்றிக் கொண்டிருக்கின்ற நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடனுடன் இருக்க வேண்டும்.மேலும் தூய்மை பணியாளர்கள் ஆகிய நீங்கள் உங்களுடைய குழந்தைகளை தயவு செய்து படிக்க வையுங்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உங்களுக்காக பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்.
அதனால் உங்களுடைய குழந்தையை படிக்க வையுங்கள், கையுறை, முக கவசத்தை பயன்படுத்தி நோய் நொடி இல்லாமல் பாதுகாப்பாக இருங்கள். மேலும் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலமாக பல்வேறு முகாம்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதை பயன்படுத்திக்கொண்டு உங்களது உடல் நலத்தை பேணி பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான வாழ்வாதாரத்தை கொடுப்பதற்கு என்றைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியமானது, தூய்மை காவலர் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் முறையாக சென்றடைகிறதா என்பது குறித்து மாவட்டந்தோறும் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு அதை உறுதி செய்து வருகிறது. மேலும், அவர்களிடமிருந்து குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்தும், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்து அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், இன்று விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைவர் அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் மூலம் விபத்து மற்றும் இயற்கை மரண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடி உதவி, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மூலம் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.இம்மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு மேற்கண்டவாறு பலன்கள் வழங்க ஏதுவாக தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தின் application.tncwwb.com என்ற இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றம் செய்திடவும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், நமது மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் பல்நோக்கு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. உங்களுடைய கிராம பஞ்சாயத்தில் நடைபெறுகின்ற முகாமில் கலந்து கொண்டு, உங்களுடைய உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்த முகாம்களில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ போன்ற எல்லா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். அதனை தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் தூய்மைப் பணியாளர்களுக்கென்று தனியாக சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொண்டு, நல வாரிய அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை போன்றவைகளை பெற்று பயனடையலாம்.
தமிழ்நாடு அரசின் மூலம் தூய்மைப்பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் அவர்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி மாநகராட்சி ஆணையர் திரு.சரவணன், தாட்கோ மேலாளர் திருமதி மஞ்சுளா, சிவகாசி மாநகராட்சி துணை மேயர் திருமதி விக்னேஷ் பிரியா, மாநகர் நல அலுவலர் மரு.ஸ்ரீ.தேவி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், சிவகாசி மாநகராட்சி மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் சுமார் 500-க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply