திருச்சுழி வட்டாரத்தில் சம்பூர்ணதா அபியான் முழு நிறைவு 2.0 திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டாரம் கல்லூரணி ஊராட்சியில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட முன்னேற விழையும் வட்டாரமான திருச்சுழி வட்டாரத்தில் சம்பூர்ணதா அபியான் முழு நிறைவு 2.0 திட்டத்தினை நிதி ஆயோக் இயக்குநர் டி.நளினா சோபியா,இ.வ.ப., (இந்திய வருவாய் பணி) அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.சுகபுத்ரா,I A S., அவர்கள் (12.02.2026) தொடங்கி வைத்தார். பின்னர், திருச்சுழி வட்டாரத்தில் இத்திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ள காரணிகளான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, வேளாண்மை மற்றும் கல்வி உள்ளிட்டவைகளில் இலக்கினை அடைவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கும் விதமாகவும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் சம்பூர்ணதா அபியான் 2.0 திட்டம் (28.01.2026 முதல் 14.04.2026 வரை)தொடங்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, வேளாண்மை மற்றும் கல்வி தொடர்பான முக்கியக் குறியீடுகளில் 100 சதவிகித இலக்கை பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, சமூகப் பங்கேற்பும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மூலம் அடைவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.விருதுநகர் மாவட்டத்தில் சம்பூர்ணதா அபியான் 1.0 (2024) திட்டத்தின் கீழ், முன்னேற விழையும் வட்டம்(Aspirational Block) மற்றும் முன்னேற விழையும் மாவட்டம் (Aspirational District) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்ட ஆறு குறியீடுகளும் 100 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதனைத்தொடர்ந்து, சம்பூர்ணதா அபியான் 2.0 திட்டம் மூலம் 28.01.2026 முதல் 14.04.2026 வரை அனைத்து துறைகளின் முழுமையான ஒருங்கிணைப்புடன் முன்னேற விழையும் வட்டாரமான திருச்சுழி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இளம் குழந்தைகள் தொடர்ந்து துணை ஊட்டச்சத்து பெறுவதை உறுதி செய்தல், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் அளவை மேம்படுத்துதல், அங்கன்வாடிகளில் செயல்பாட்டு கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வழங்குதல், சரியான பெண்கள் கழிப்பறை வசதிகள் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கால் மற்றும் வாய் நோய்க்கு எதிராக கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதை அதிகரித்தல் ஆகிய 6 குறியீடுகளிலும்,அதுபோல, முன்னேற விழையும் மாவட்ட அளவில், பிறக்கும் போது எடையுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காசநோய்களின் சிகிச்சை விகிதத்தை மேம்படுத்துதல், கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வழக்கமான சுகாதார மற்றும் ஊட்டச்சத்து நாட்களை உறுதி செய்தல், பள்ளிகளில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை விரிவுபடுத்துதல் போன்ற 5 முக்கிய குறியீடுகளிலும் இந்த பிரச்சாரம் செயல்படும். எனவே, நம் மாவட்டம் மற்றும் வட்டாரப்பகுதிகளில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் ஊட்டச்சத்து, கால்நடைகளுக்கு தடுப்பூசி என அனைத்து வகையிலும் துறை சார்ந்த ஒத்துழைப்பினை வழங்கி, வழங்கப்பட்டுள்ள குறியீடுகளில் முழுமை அடைய செய்ய வேண்டும். இதற்காக வட்டார அளவில் உள்ள அலுவலர்களை தொடர்பு கொண்டு, அது குறித்து தெரிந்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ள சம்பூர்ணதா அபியான் 2.0 (Sampoornata Abhiyan 2.0) 2-ஆம் கட்ட திட்டத்தில் மாவட்டங்களுக்கு 6-வகையான இலக்குகளும், வட்டார பகுதிகளுக்கு 5-வகையான இலக்குகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.சுகாதார, ஊட்டச்சத்து, கல்வி மற்றும் விவசாயம் உள்ளிட்ட முக்கிய வளர்ச்சியினை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும். இதுபோன்ற திட்டங்களை பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் பயன்படுத்தி எத்தகைய அளவு முன்னேற்றம் அடைகிறோமே அதை பொறுத்தே மாவட்டத்தின் முன்னேற்றமும், வட்டாரத்தின் முன்னேற்றமும் அமைந்துள்ளது.இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் 112 முன்னேற விழையும் மாவட்டங்களும் 500 முன்னேற விழையும் வட்டாரங்களும் பயன்பெற உள்ளன. இதில், விருதுநகர் மாவட்டம் முன்னேற விழையும் மாவட்டமாகவும், முன்னேற விழையும் வட்டாரமாக திருச்சுழி வட்டாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு வாரத்திற்கும் ஒரு நிகழ்ச்சி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வாரம் சர்வதேச அளவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் அறிவியல் தொழில்நுட்பத்தில் அடைந்துள்ள சாதனைகளை கொண்டாடும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பெண்களின் கல்வியறிவானது நம் குடும்பத்தை காப்பற்றுவதற்கு உதவிகரமானதாக அமையும். அதனைத்தொடர்ந்து, அறிவியலிலும் பெண்கள் சாதிக்க வேண்டும். அதற்கான உறுதிமொழியினை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், சம்பூர்ணதா அபியான் 2.0 என்னும் முழுமையான இயக்கத்தின் கீழ், திருச்சுழி வட்டாரத்தில் முன்னேற்றம் காண்பதற்கு முழுமையான இயக்க பணிகளில் எனது பங்களிப்பை அளிப்பேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.பின்னர், சம்பூர்ணதா இயக்கம் 2.0 விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து, சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவ செவிலியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட சம்பூர்ணதா இயக்கம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், விவசாயம், மருத்துவம், ஊட்டச்சத்து, மகளிர் மேம்பாடு ஆகிய துறைகள் சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) வீ.கேசவதாசன், முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply