மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 177 பயனாளிகளுக்கு ரூ.59.46 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காரிசேரி கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் (08.07.2026) நடைபெற்றது.
இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான விபத்து நிவாரண உதவித்தொகையையும், 155 பயனாளிகளுக்கு ரூ.56.79 இலட்சம் மதிப்பில் இணைய வழி பட்டாக்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.26,000/- மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.13,000/- மதிப்பில் தையல் இயந்திரங்களையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் 4 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ரூ.8000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களையும், வேளாண்மைத்துறையின் சார்பில், 6 பயனாளிகளுக்கு ரூ.48,374/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில், 3 பயனாளிகளுக்கு ரூ.71,300/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளையும் என மொத்தம் 177 பயனாளிகளுக்கு ரூ.59.46 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.
மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டும், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டும் வருகிறது.தமிழக அரசின் சிங்கபெண் அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுத்து, துரிதமாகச் செயல்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல் உதவியை, 1091 என்ற உதவி எண் மூலம் நேரடியாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடர்பு கொள்ளலாம்.
விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டிற்கான வேலை நாட்கள் 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வேலை நாட்களும் ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சரியான பணியினைத் தேர்வு செய்து கிராமப்புறக் குடும்பங்களுக்கு பணி வழங்கப்படும்.எல் நினோ மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கையாக தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கவும், விவசாய உற்பத்தியில் கவனம் செலுத்தவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிட சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு, பயன்பெற வேண்டுமெனவும், மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர்) திரு.ரவி மீனா இ.வ.ப., சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,இ.ஆ.ப., தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, சிவகாசி வட்டாட்சியர், அரசு அலுவலர்கள், உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply