விருதுநகர் - பாலவநத்தம் - அருப்புக்கோட்டை சாலையினை இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகளுக்குஅமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை காந்தி நகரின் (27.02.2026) நெடுஞ்சாலைத்துறை(கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில், விருதுநகர் - பாலவநத்தம் - அருப்புக்கோட்டை சாலையினை இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மொத்தம் ரூ.115 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை இராமலிங்கம் மில் வரை செல்லும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், விபத்துக்களை தவிர்ப்பதற்கும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.அதன்படி, முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் திருவில்லிபுத்தூர் - பார்த்திபனூர் சாலையில் விருதுநகர் அல்லம்பட்டி முக்குரோடு முதல் பாலவநத்தம் வரை 5.60 கி.மீ. நீள சாலையை ரூ.43.00 கோடி மதிப்பீட்டிலும்,பாலவநத்தம் முதல் புளியம்பட்டி புதிய புறவழிச்சாலை ரவுண்டானா வரை மற்றும் அருப்புக்கோட்டை காந்தி நகர் முதல் இராமலிங்கா மில் சந்திப்பு வரை 12 கி.மீ நீள சாலையை ரூ.72.00 கோடி மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் ரூ.115 கோடி மதிப்பில் 17.60 கி.மீ இருவழிச் சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இச்சாலைகள் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசலும் பயண நேரமும் குறைவதோடு, விபத்துகள் தவிர்க்கப்படுவதுடன், சரக்கு போக்குவரத்து தடையின்றி நடைபெற வழிவகுக்கும் என தெரிவித்தார்.
மேலும், ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்த நாட்டு மக்களின் பயண வேகத்தில் அடங்கியிருக்கிறது. அந்த வேகத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில், இன்று அருப்புக்கோட்டை காந்தி நகர் மண்ணில், நம் மாவட்டத்தின் போக்குவரத்து நரம்பு மண்டலங்களாக விளங்கும் சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் மாபெரும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாயப் பெருமக்களின் வணிகத்திற்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்திற்கும், பொதுமக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதற்கும் ஒரு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.
இந்தச் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம், தென்காசி, இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் பயணிகள், இனி மதுரை மாநகருக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த மாற்றுப் பாதையைப் பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசலின்றி, மிக எளிதாகவும் விரைவாகவும் இராமேஸ்வரம் சென்றடைய முடியும். இது பயண நேரத்தைக் குறைப்பதுடன், விபத்துகளைத் தவிர்க்கவும், சரக்கு போக்குவரத்து தடையின்றி நடைபெறவும் பெரும் உறுதுணையாக அமையும்," எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply