ரூ.30 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இராஜபாளையம் இணைப்புச்சாலையினை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் (10.03.2026) நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024-2025 கீழ் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முதல் இராஜபாளையம் அரசு மருத்துவமனை வரை ரூ.30 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இணைப்புச்சாலையினை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த இணைப்பு சாலை இன்றைக்கு நேற்று போட்ட திட்டமல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு துணை முதலமைச்சராக இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த போது, இந்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்ல புதிய பேருந்து நிலையத்திற்கும் - தென்காசி சாலைக்கும் ஒரு இணைப்பு இருந்தால்தான் ஏதுவாக இருக்கும் என கணித்தார்.அந்த வகையில், அன்று அவர் கணித்த இந்த இணைப்பு சாலை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசினாலே தொடங்கி முடிக்கப்பட்டுள்ளது.இந்த இணைப்பு சாலை பணிக்கு ரூ.30.00 கோடியும், நில எடுப்பிற்காக ரூ.8.34 கோடியும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு மொத்தம் ரூ.38.34 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இராஜபாளையம் நகரமானது வளர்ந்து வரும் ஒரு முக்கிய நகரமாகும். இந்நகரத்தில் பின்னலாடைகள் மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால், இராஜபாளையம் நகருக்குள் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இராஜபாளையத்தின் புதிய பேருந்து நிலையம் இராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளதால்,
மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் தென்காசி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் முக்கிய வீதிகளில் சென்று வருகிறது. அவ்வாறு வருவதால், பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதித்த வண்ணம் உள்ளது. இவற்றை கருந்தில் கொண்டு இந்த புதிய சாலையை அமைப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு சாலைப்பணிகள் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கி இப்பணிகள் முடிக்கப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திருநெல்வேலி, சங்கரன்கோவில், இராஜபாளையம், மதுரை, தென்காசி, கொல்லம் போன்ற வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் ஊருக்குள் சென்று நெரிசல் ஏற்படுத்தா வண்ணம் மக்களுக்கு இடையூறு இன்றி புதிய சாலை வழியாக இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று அதே வழியில் திரும்பி செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சாலையானது இராஜபாளையம், புதுப்பாளையம், கடம்பன்குளம், செட்டிகுளம், நடுவக்குறிச்சி, இந்திரா நகர், ஸ்ரீரங்கபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதி மக்களின் போக்குவரத்திற்கு பயனுள்ள வகையில் இருக்கும். இதனால் இராஜபாளையத்திற்கு போக்குவரத்து நெரிசல் குறையும்.
இது மட்டுமல்லாமல், இராஜபாளையம் நகருக்கு மேம்பாலமும், தாமிரபரணித் திட்டமும் என கடந்த ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இராஜபாளையம் நகரத்தில் என்னென்ன திட்டங்கள் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து கொடுத்திருக்கின்றோம்.
மேலும், கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதை 2000 ரூபாவாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.அதுபோல அரசு பள்ளியில் படித்திருக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என ஒவ்வொன்றாக சிந்தித்து திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துகிறார்கள். மேலும், நியாய விலைக்கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவது என்பது வயதானவர்களுக்கு மிகப்பெரிய காரியமாக இருந்தது. அதனை மாற்றி தாயுமானவர் திட்டத்தின் மூலம் ரேஷன் கடை ஊழியர்கள் வயதானவர்களுக்கு வீடு தேடி பொருள்களை வழங்கி வருகிறார்கள்.இது போன்ற எண்ணற்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வரும் இந்த அரசுக்கு பொதுமக்கள் என்றும் ஆதரவாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
0
Leave a Reply