காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (22.02.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கலைஞரின் கனவு இல்லம் பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் திட்டம் ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம், சமத்துவபுரம் உயிர் நீர் இயக்கம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு அபிவிருத்தி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஊராட்சி ஒன்றிய பொது நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவலர்களை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும், ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகள், நிலுவையிலுள்ள பணிகள், முடிவுற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகளை விரைந்தும், தரமானதாகவும் உரிய காலத்திற்குள் செய்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் அரசின் அனைத்து திட்டங்களும் சாமானிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பிரத்யேக திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து தொடர்ச்சியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்பட்டு வருகிறது.அரசின் பொதுவான திட்டங்களையும் தாண்டி இலக்கிய, கலை, பண்பாடு உள்ளிட்ட திட்டங்களிலும் ஒரு தனியிடத்தை நமது மாவட்டம் பெற்றிருக்கிறது.
நமது மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவு படுத்தவும், குறிப்பாக குடிநீர், சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குறைகள், பத்திரிகை மூலம் கிடைக்கப்பெறும் குறைதீர்க்க வேண்டிய செய்திகளுக்கு அரசு அலுவலர்கள் உடனடியாக செயல்பட்டு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். முன்னேற விளையும் பகுதியான நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் செயல் படுத்தப்படும் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும். செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் நிர்வாக சிக்கல் இருக்கும்பட்சத்தில் அதனை மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், அங்கன்வாடி புதிய கட்டடங்கள் கட்ட வேண்டியதன் தேவை, மராமத்து செய்ய வேண்டிய அரசு கட்டடங்கள், இடமில்லாத அங்கன்வாடி மையங்களுக்கு இடத்தை தேர்வு செய்தல் குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், இந்த பகுதிகளில் அங்கன்வாடி மையங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்கூரை அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.பணிகள் நடைபெறும் மையங்களில் மாற்று ஏற்பாடாக அருகில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் அங்கன்வாடி மையத்தை செயல்படுத்தலாம்.நபார்டு திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தண்ணீர் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
அனைத்துபணியாளர்களின் சேவைகளை உறுதிசெய்ய வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பேவர் கல்தளம் அமைத்ததற்கு பின்பு சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும். சுகாதார நிலையங்களுக்கு செல்லும் சாலைகளில் போதிய தெருவிளக்கு வசதியை செய்ய வேண்டும்.நரிக்குடி, வீரச்சோழன் முக்குளம், கட்டனூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்.பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக க.விலக்கிலிருந்து ம.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மார்க்கமாக ஆலம்பட்டி கிராம வரை செல்வதற்கு சிற்றுந்து வசதி ஏற்பாடு செய்யப்படும்.முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்கு இயலாத அதிக நீளமான சாலைகளை பிற திட்டங்கள் மூலமாக நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கி நிறைவேற்றப்படும்.
குடிநீர் விநியோகம் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
அனைத்து பகுதிகளிலும் தேவையான குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைளை தொடர்ந்து மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply