திருகாக்கரையப்பன் கோயில்.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரான வாமனர், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரையில் திருகாக்கரையப்பன் என்னும் பெயரில் கோயில் கொண்டிருக்கிறார். இவரை வழிபட்டால் முன்வினை பாவம் தீரும். இங்குள்ள தாயார் பெருஞ்செல்வ நாயகியை தரிசித்தால் பணம் சேரும்.
அசுர குலத்தில் பிறந்த மகாபலிச்சக்ரவர்த்தி தன் செல்வத்தை தர்மம் செய்தார். இதனால் தன்னை விட தர்மம் செய்பவர் யாருமில்லை என்ற அகந்தை ஏற்பட்டது.
அகந்தை அழிந்தால் தன்னை வந்தடையும் தகுதி மகாபலிக்கு கிடைக்கும் என எண்ணினார் மகாவிஷ்ணு. அதற்காக குள்ள வடிவில் 'வாமனர்' என்ற பெயரில் பூலோகம் வந்தார். மகாபலியிடம் தானமாக மூன்றடி மண் கேட்டார்.
"குள்ளமான தங்களின் காலடியால் மூன்றடி மட்டும் கேட்கிறீர்களே. இன்னும் அதிகமாக கேட்கலாமே" என்றார் மகாபலி.
வந்திருப்பவர் மகாவிஷ்ணு என்பதை அறிந்த அசுரகுரு சுக்ராச்சாரியார், 'தானம் அளிக்காதே' என மகாபலியைத் தடுத்தார். ஆனால் குருநாதரையும் மீறி மகாபலி சம்மதித்தார். உடனே விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு ஓரடியால் பூமியையும், இன்னொரு அடியால் ஆகாயத்தையும் அளந்து விட்டு, "மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே " எனக் கேட்டார். அகந்தை அடங்கிய மகாபலி, "பகவானே ... என் தலையைத் தவிர வேறு இடமில்லை" என பணிந்தார். அவரைத் தன் காலால் பூமிக்குள் அழுத்தி மகாவிஷ்ணு ஆட்கொண்டார். இந்த சம்பவம் நடந்த இடம் எர்ணாகுளம் அருகிலுள்ள காக்கரை. இங்கு
பெருமாள் திருக்காக்கரையப்பன் (வாமனர்) என்ற பெயரில் நின்ற கோலத்தில் இருக்கிறார் . பெருஞ்செல்வ நாயகி தனி சன்னதியில் இருக்கிறார்.
கோயிலுக்கு வெளியே பகவதி, சாஸ்தா, சுந்தர யக்க்ஷி, கிருஷ்ணர், நாகர் சன்னதிகள் உள்ளன.
பரசுராமர் இக்கோயிலை உருவாக்கினார். மகாபலி பூஜித்த சிவலிங்கம் உள்ளது. கோயில் வாசலில் மகாபலியின் சிம்மாசனம் உள்ளது. இங்கு பக்தர்கள் விளக்கேற்றுகின்றனர்.
கேரள பாணியில் ஓடு வேய்ந்த வட்ட வடிவக் கோயில் இது. முன் மண்டபத்தில் வாமனரின் மரச்சிற்பம் உள்ளது. திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. 9 முதல் 12ம் நூற்றாண்டு வரை சேர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.
0
Leave a Reply