கொய்யா சாகுபடியில் அதிக மகசூல் பெற ...
கொய்யா ஆப்பிளுக்கு இணையான ஊட்டச்சத்துகளைக் கொண்டிருப்பதால்'ஏழைகளின் ஆப்பிள்' என்று அழைக்கப்படுகிறது. குறைந்த பராமரிப்பில் நல்ல வருமானம் தரக்கூடிய இப்பயிரில், முறையான சாகுபடி உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.
மண் மற்றும் தட்பவெப்பம்: நல்ல வடிகால் வசதியுள்ள பல்வேறு மண் வகைகளிலும் கொய்யா வளரும். மண்ணின் கார அமிலத்தன்மை 4.5 முதல் 7.5 வரை இருப்பது ஏற்றது.
ரகங்கள்: லக்னோ 49, அலகாபாத் சபேதா, அர்கா அமுல்யா, லலித், ஸ்வேதா, பனாராசி, ரெட் பிளஸ் உள்ளிட்ட ரகங்களைப் பயிரிடலாம்.
நடவு முறை: நிலத்தை நன்கு உழுது 60 செ.மீ. அளவில் குழிகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 20 கிலோ தொழு உரம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இட்டு கன்றுகளை நடவு செய்யலாம். பொதுவாக 6 × 6 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யலாம்.
நீர் மற்றும் உர மேலாண்மை: இளஞ்செடிகளுக்கு முறையான நீர்ப்பாசனம் அவசியம். சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நீரைச் சேமிக்கலாம். மரத்தின் வயது மற்றும் மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட வேண்டும். தேவையான நுண்ணூட்டச் சத்துகளையும் வழங்க வேண்டும்.
களை மற்றும் ஊடுபயிர் மேலாண்மை: களைகளை அவ்வப்போது அகற்றி, மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க இயற்கை மூடாக்கு அமைக்கலாம். ஆரம்ப காலத்தில் பச்சைப்பயறு, உளுந்து, தக்காளி, பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றை ஊடுபயிராகச் சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பெறலாம்.
கவாத்து மற்றும் பயிர் பாதுகாப்பு: தேவையற்ற கிளைகளை அகற்றி மரத்தின் நடுப்பகுதியில் காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி கிடைக்கச் செய்ய வேண்டும். பழ ஈக்கள், மாவுப்பூச்சிகள், வேரழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களைக் கண்காணித்து உரிய கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அறுவடை: பதியன், காற்றடுக்குதல் மற்றும் ஒட்டுக்கட்டுதல் மூலம் உருவாக்கப்பட்ட கன்றுகள் பொதுவாக 2 முதல் 3 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும். பழங்கள் அடர் பச்சை நிறத்திலிருந்து வெளிர் பச்சை அல்லது மஞ்சள் கலந்த பச்சை நிறத்திற்கு மாறும்போது அறுவடை செய்யலாம்.
முறையான நடவு, சொட்டுநீர்ப் பாசனம், கவாத்து மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் கொய்யா சாகுபடியில் தரமான பழங்களையும் நல்ல வருமானத்தையும் பெறலாம்.
0
Leave a Reply