சாலையை ஆக்கிரமிக்கும் லாரிகள். தொடரும் விபத்துகள்! உயிரிழப்பால் பொதுமக்கள் அச்சம்.
ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில், தொழிற்சாலைகளுக்கான சரக்குகளை ஏற்றிச் செல்ல வரும் லாரிகள் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.
சரக்குகளை ஏற்றுவதற்கான அனுமதி மற்றும் வாய்ப்பு கிடைக்க இரண்டு நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், ஓட்டுநர்கள் லாரிகளை சாலையோரங்களில் முறையாக ஒதுக்காமல் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.
இதன் காரணமாக நெடுஞ்சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் போதிய இடவசதியின்றி சிரமத்திற்கு உள்ளாவதுடன், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இப்பகுதியில் சாலையில் நடந்து சென்ற இளைஞர் ஒருவர் மீது கேரளாவில் இருந்து வந்த லாரி மோதியது. லாரி மோதுவதைத் தவிர்க்க ஒதுங்குவதற்கு போதிய இடமில்லாத நிலையில் ஏற்பட்ட இந்த விபத்தில், அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதவிர, கை, கால்கள் முறிவு உள்ளிட்ட பல்வேறு காயங்களுடன் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உயிரிழப்புகளையும் விபத்துகளையும் தடுக்க, தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் லாரிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
0
Leave a Reply