வைகை இலக்கியத் திருவிழா.
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லூரியில் 10.02.2026 மற்றும் 11.02.2026 ஆகிய இரண்டு நாட்கள் வைகை இலக்கியத் திருவிழா நடைபெற்றது.முதல் நாள் நடைபெற்ற துவக்க விழாவில் விருதுநகர் மாவட்ட நூலக அலுவலர் திருமதி.சி.பாலசரஸ்வதி அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை, மாவட்ட வருவாய் அலுவலர் திருமிகு.ரா.ஆனந்தி அவர்கள் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.அவர் தம் வாழ்த்துரையில் எழுத்தாளர்களும், மாணவர்களும் சந்தித்துக் கொள்ளும் திருவிழா. நூலகத்தில் படித்த புத்தகங்களின் எழுத்தாளர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு. வாசிப்புப் பழக்கம் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்று கூறினார்.
எழுத்தாளர் டாக்டர்.த.அறம் அவர்கள் பேசும் போது இலக்கியங்களில் “நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்” பற்றி பேசினார். எழுத்தாளர் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் கதைகள், சிலப்பதிகாரம் முதல் இன்றைய கதைகள் வரை விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை குறித்து பேசினார்.“மதுரையை பாடிய கதைகள்” குறித்து திரு.ம.மணிமாறன் அவர்கள் பேசிய போது திருமலை நாயக்கர் ஆட்சி, விளக்குத் தூண் வரலாறு, விக்டோரியா மகாராணிக்கு மதுரை கீழக்குயில் குடி மக்கள் எழுதிய கடிதம் வரை திறம்பட எடுத்துரைத்தார். காவல் கோட்டம் நூல் மதுரை குறித்து அழகாக பேசுகிறது என தெரிவித்தார். எழுத்தாளர் திரு.சு.இலட்சுணப் பெருமாள் அவர்கள் பேசும் போது பஞ்ச பாண்டவர்கள் கதை, கரிசல் மக்கள் வாழ்வியலோடு நகைச்சுவை உற்பத்தி செய்யப்படுகிறது. தாலாட்டு, ஒப்பாரி பாடல்களில் இருக்கும் நகைச்சுவை குறித்தும் சிறப்பாக பேசினார். எழுத்தாளர் திரு.தேனி சீருடையான் “தேனி கதைகள்” பேசும் போது தேனி வட்டார கதைகளில் உலகில் மிகப் பெரிய வேட்டை எது என்றால் அது ஓநாய் தான் என்று குறிப்பிட்டார்.
எழுத்தாளர் பாமா அவர்கள் “நிமிர்ந்து நில், துணிந்து சொல்” என்ற தலைப்பில் பேசும் போது சமூக அக்கறையுடன் சமூகத்தை மாற்றும் மாணவர்கள் தேவை, உடல் வலிமையை நம்பி இருந்த காலம் போய் மன வலிமையும் அறிவு கூர்மையும் தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. மாற்று சிந்தனை, மாற்று கலாச்சாரம் இன்றைய கால கட்டத்திற்கு தேவை என்று குறிப்பிட்டார்.எழுத்தாளர் திரு.மதிகண்ணன் அவர்கள் தனுஷ்கோடி ராமசாமி கதைகளில் பெண்கள் குறித்து சிறப்பாக பேசினார்.இறுதியாக மாவட்ட நூலக ஆய்வாளர் திரு.எஸ்.மலர்வேந்தன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நூலக கண்காணிப்பாளர் திரு.பழனிக்குமார், மாவட்ட இருப்பு சரிபார்ப்பு அலுவலர் திரு.கிரகம்துரை அவர்களும் செய்தனர்.
படைப்பரங்கம் இரண்டாம் அரங்கில் எழுத்தாளர்கள், திரு.எஸ்.காமராஜ், திரு.நந்தன் கனகராஜ் “கவிதைகளில் சூழலியல்” திரு.அன்னக்கொடி - “எனது நாவல்களில் சாதாரண மனிதர்கள்” திருமிகு.பிரியா பாபு – திருநங்கை செயற்பாட்டாளர் அவர்கள் “தமிழ் இலக்கியத்தில் திருநங்கைகள்”, திரு.பாண்டியக் கண்ணன் அவர்கள் “கலையும் இலக்கியமும் தோற்றமும் வளர்ச்சியும்”, எழுத்தாளர்.திரு.கண்மணி ராசா அவர்கள் “நதியும் பண்பாடும்” குறித்தும் திரு.ரெங்கையா முருகன் அவர்கள் “சிவகாசி காலண்டர் உருவாக்கிய பண்பாட்டு அசைவுகள்” குறித்து பேசினார்கள்.வைகை இலக்கியத் திருவிழாவின் இரண்டாம் நாளான 11.02.2026 அன்று எழுத்தாளர்கள் திரு.ச.தமிழ்செல்வன் அவர்களும், திரு.பாமயன் அவர்களும், துவக்கி வைத்தனர். நிகழ்ச்சிகள் பண்பாட்டு அரங்கம் – 1, பண்பாட்டு அரங்கம் – 2 என இரண்டு அரங்கங்களில் நடைபெற்றது.
பண்பாட்டு அரங்கம் ஒன்றில் எழுத்தாளர் பேரா.சுந்தர்காளி அவர்கள் “பாணர் வரலாறு – சில பிரச்சனைகள்” என்ற தலைப்பிலும், திரைப்பட இயக்குநர் திரு.லெனின் பாரதி அவர்கள் “சினிமாவில் இலக்கியத்தின் தேவை“ எழுத்தாளர் திருமிகு.சசிரேகா அவர்கள், “கரிசல் எழுத்தாளர்களின் படைப்புகளில் மானுடம்“ பேரா.சு.ராமர் அவர்கள், “தொன்மையும் தொடர்ச்சியும்“ பேரா.பா.பொன்னி எழுத்தாளர் அவர்கள், “சிலம்பின் ஓசை“, தொல்லியலாளர் திரு.காந்திராஜன் அவர்கள் “இலக்கியம் தொன்மையும் தொடர்ச்சியும்“ பேரா.பெ.க.பெரியசாமி ராஜா அவர்கள் “தமிழ் தொன்மையும் தொடர்ச்சியும்“ குறித்து பேசினார்கள்.பண்பாட்டு அரங்கம் -2-ல் பேரா.இரா.மானசீகன் அவர்கள் “இலக்கியத்தால் இளைப்பாறுவோம்“, கவிஞர்.நா.முத்துநிலவன் “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ ? இப்படிக்கு – தமிழ், திரு.மேகவண்ணன் எழுத்தாளர் “நவீன கதைகள்“, எழுத்தாளர்.மதுமிதா அவர்கள் “மதுமிதாவின் படைப்புலகம்“, திரு.பெ.இரவீந்திரன் அவர்கள், “கரிசல் நிலவியல்“, திருமிகு.விஜிலா தேரிராஜன், “பெண்களும் தண்ணீரும்“, பேரா.பா.ச.அரிபாபு அவர்கள் “தென் தமிழ்நாட்டில் நிகழ்த்துதலிலும் வழிபாட்டிலும் ஒயில் கும்மி“ என்கிற தலைப்புகளில் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள்.
நிறைவு விழாவில் மாவட்ட நூலக அலுவலர் திருமிகு.சி.பாலசரஸ்வதி அவர்கள் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் கல்லூரி பரிபாலன சபை தலைவர், செயலாளர், கல்லூரி முதல்வர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கினார்கள். இந்நிகழ்வில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட நூலக கண்காணிப்பாளர் திரு.பழனிக்குமார், மாவட்ட நூலக ஆய்வாளர் திரு.சோ.மலர்வேந்தன், மாவட்ட இருப்பு சரிபார்ப்பு அலுவலர் திரு.து.கிரகம்துரை, மாவட்ட மைய நூலகர் திரு.செந்தில்குமார், மாவட்ட வைகை இலக்கியத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் திரு.அ.பெ.மாசிலாமணி, திருமிகு.மு.ராதா, திருமிகு.மோ.கிருஷ்ணவேணி, திருமிகு.இராஜேஸ்வரி, தொகுப்பாளர்.சி.முருகேசன் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கி மாவட்ட நூலக அலுவலர் கௌரவப்படுத்தினார். ஆறுமுகம் பழனிகுரு மகளிர் கல்லூரி மாணவிகளின் நாட்டுப்புற நடனம், பேச்சரங்கம் நிகழ்விலும் மாணவர்கள் சிறப்பாக பங்கேற்றார்கள்.
0
Leave a Reply