இனிய வாழ்வு அளிக்கும் வரலட்சுமி விரதம்: ஆகஸ்ட் 21-ம் தேதி
தென்னிந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படும் வரலட்சுமி விரதம், மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்காக கடைப்பிடிக்கப்படும் முக்கியமான விரதமாகும்.
செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை விரதம் இருந்து வழிபடுவதற்கு உகந்த நாளாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது. பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும் இந்த விரதம், ‘வரலட்சுமி விரதம்’ அல்லது ‘வரலட்சுமி நோன்பு’ என்றும் அழைக்கப்படுகிறது.
ஆடி அல்லது ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 21-ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.
‘வரலட்சுமி’ என்றால் ‘வரங்களை அருளும் லட்சுமி’ என்று பொருள். இந்த நாளில் மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் வேண்டிய வரங்களைபெறலாம்என்பதுநம்பிக்கை.மேலும்அஷ்டலட்சுமிகளானஆதிலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி ஆகியோரின் அருளையும் பெறலாம் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
சுமங்கலி பெண்கள் தங்கள் கணவர் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழவும், குடும்பத்தில் செல்வ வளம் பெருகவும், மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெறவும் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர்.
வரலட்சுமி விரத நாளில் மகாலட்சுமி தாயார் இல்லம் தேடி வருவதாக ஐதீகம். இதனால் அன்றைய தினம் வீட்டை சுத்தம் செய்து, விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் குடும்பத்தில் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
வரலட்சுமி விரதம் உருவானது குறித்து பல கதைகள் உள்ளன. அவற்றில் ஷியாமாவின் கதை முக்கியமானது. சௌராஷ்டிர மன்னன் பத்ரஷர்வாவின் மனைவி சந்திரிகா, துவாதசி நாளில் மகாலட்சுமியை அவமதித்ததால் தனது செல்வத்தையும் நாட்டையும் இழந்தாள். ஆனால் அவர்களின் மகள் ஷியாமா, மகாலட்சுமியிடம் இருந்து வரலட்சுமி விரத முறையை அறிந்து அதைத் தொடர்ந்து கடைப்பிடித்தாள். பின்னர் தனது பெற்றோருக்கும் விரதத்தின் மகிமையை எடுத்துரைத்தாள். சந்திரிகாவும் விரதத்தை முறையாகக் கடைப்பிடித்ததால் இழந்த செல்வங்கள் அனைத்தும் மீண்டும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
மற்றொரு கதையில், மகத நாட்டைச் சேர்ந்த சாருமதி என்ற பக்தையான பெண்ணின் கனவில் மகாலட்சுமி தோன்றி வரலட்சுமி விரதத்தைப் பற்றி கூறினார். மகாலட்சுமியின் அறிவுரைப்படி சாருமதி விரதம் இருந்து வழிபட்டதால், அவளுக்கு செல்வ வளமும் குடும்ப நலமும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் வரலட்சுமி விரதம் செல்வம், நலம், குடும்ப மகிழ்ச்சி ஆகியவற்றை வழங்கும் சிறப்புமிக்க விரதமாகப் போற்றப்படுகிறது.
0
Leave a Reply