சாத்தூர் நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர்த் திட்டப் பணிகள்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (11.06.2026) நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக சாத்தூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அரசு திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் வழங்கும் நீர் ஏற்ற நிலையத்தின் கட்டுப்பாட்டு அலகினை (Control Unit) பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்.
நுண் உர மையம் ஆய்வு:
தூய்மை இந்தியா திட்டம் 2018-2019 ன் கீழ் சாத்தூர் நகராட்சி மேலக்காந்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள நுண் உர செயலாக்க மையத்திற்குச் (Micro Composting Centre)* சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதைப் பார்வையிட்டார்.
விவசாயம் மற்றும் மண்ணிற்கு நன்மை பயக்கும் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை எவ்விதத் தொய்வுமின்றி (தடையின்றி) தொடர்ந்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆய்வு:
தொடர்ந்து, S.H.N. மேரி தொடக்கப்பள்ளி மற்றும் படந்தால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.
குழந்தைகளுக்குக் கால அட்டவணைப்படி சத்தான மற்றும் சுவையான உணவினைத் தடையின்றி வழங்கவும் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் சமையலர்களுக்கு அறிவுறுத்தினார்.
உள்கட்டமைப்பு மேம்பாடு (புதிய பேருந்து நிலையம்) ஆய்வு:
கலைஞர் மேம்பாட்டுத்திட்டம் 2025-2026-ன் கீழ், ரூ.6.79 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக இந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மிக விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு உத்தரவிட்டார்.
பசுமைத் திட்டம் & ஊரக வேலைவாய்ப்பு (மரக்கன்றுகள் நடுதல்) :
தொடர்ந்து, படந்தால் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) ன் கீழ், ₹2.10 இலட்சம்* மதிப்பில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெகிழி கழிவு மறுசுழற்சி மையம் ஆய்வு:
பின்னர், படந்தால் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழு மூலம் ஊராட்சிகளில் இருந்து சேகரிக்கப்படும் நெகிழி கழிவுகள் மறுசுழற்சி செயல்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
ஊராட்சிமன்ற அலுவலகம் ஆய்வு:
படந்தால் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் ஊராட்சிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான கோப்புகளை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது, நகராட்சி ஆணையர், நகராட்சிப் பொறியாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
0
Leave a Reply