தரமான உணவகங்கள் செயல்படும் வளாகமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது
மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்களது தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல் குழு கூட்டம் (04.08.2026) நடைபெற்றது.உணவு வணிகர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் மற்றும் அவர்கள் தொழிலை மேம்படுத்துவதற்கான சட்டப்பூர்வ வசதிகள் போன்றவை குறித்தும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தில் அவர்களுக்கு உள்ள சலுகைகளும் எடுத்துரைக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அபராத தொகையில் தெருவோர வியாபாரிகளுக்கு 50% சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள உணவகங்கள் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு தணிக்கை நிறுவனங்களால் தணிக்கை செய்யப்பட்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தின் தலைமை செயல் அலுவலரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட விதிகளின் படி சரியான உணவு வளாகம் (Eat Right Campus) என்ற சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
அனைத்து உணவு வணிகர்களும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் பதிவு/உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்மசாலா விற்பனை கூடாது. உணவுகளை பொட்டலமிட நெகிழி (Plastic) பயன்படுத்தக் கூடாது. காலாவதியான உணவுபொருட்களையோ, குளிர்பானங்களையோ விற்பனை செய்யக் கூடாது. தெருவோரக் கடைகள் மற்றும் தள்ளுவண்டி உணவகங்கள் உட்பட அனைவரும் சுத்தமான, சுகாதாரமான உணவுகளை விற்பனை செய்யவேண்டும் மற்றும் தரமான உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிக்கவேண்டும். உணவு எண்ணெயினை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை RUCO அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளர்களிடம் மட்டுமே ஒப்படைக்கவேண்டும். இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கெட்டுப்போன நாள்பட்ட இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனைசெய்யக் கூடாது.
மேற்படி அறிவிப்பில் விதி மீறல்கள் இருக்கும் பட்சத்தில் அபராதத்துடன் கூடிய துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, வணிகர்கள் பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு உணவு பாதுகாப்பு விதிமுறைகளின் படி உணவு தயாரித்து விற்பனை செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.கூட்டத்தினை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.ச.மாரியப்பன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார். அந்தக் கூட்டத்தில் உணவு வணிக சங்கப் பிரதிநிதிகள், நுகர்வோர் சங்கப் பிரதிநிதிகள், பல்வேறு அரசுத் துறையின் அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply