விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மருளுத்து கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடைகளுக்கான 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மருளுத்து கிராமத்தில் (29.12.2025) கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கால்நடைகளுக்கான 8-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் மூலம் பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து காக்கும் வண்ணம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 29.12.2025 முதல் 18.01.2026 வரை 21 நாட்களுக்கு விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது.
கோமாரி நோய் ஒருவைரஸ் கிருமியால் உண்டாக்கப்படும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாகும். இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால் பகுதிகளில் புண்களும், காய்ச்சல் மற்றும் தீவனம் உண்ணாமை ஆகிய அறிகுறிகளோடு சினையுற்ற கால்நடைகளுக்கு கருச்சிதைவு ஏற்படுவதோடு, சினையின் தன்மை குறைந்து காணப்படும். இந்நோய் கொடிய தொற்று நோயாகும். காற்று மூலம் பரவுவதோடு ஒரு பண்ணையில் ஒரு மாட்டிற்கு காணப்பட்டால் அனைத்து கால்நடைகளுக்கும் உடனடியாக பரவ நேரிடும்.இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு உடனடி இறப்பு ஏற்படாவிட்டாலும் உற்பத்திதிறன் அதிக பாதிப்பு ஏற்படும். கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடைவளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.
இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினைபிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாகும்.
இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கிவரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடைவளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களினால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,45,700 பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள 82 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 6 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 58 குழுக்கள் அமைக்கப்பட்டு, 21 நாட்களுக்கு தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தடுப்பூசிப் பணி நான்கு மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகளுக்கும் மற்றும் நிறை மாத சினை இல்லாத மாடுகளுக்கும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போடப்பட்டு வருகிறது.
எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடைவளர்ப்போர் தங்களது பசுக்கள், எருதுகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் முன்அறிவிப்போடு நடைபெறும் கோமாரி நோய் முகாமில் தடுப்பூசியை தங்களது கால்நடைகளுக்கு போட்டுக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, பயனாளிகளுக்கு தீவன புல்கரணைகள், கால்நடைகளுக்கு உரித்தான தாது உப்பு கலவையையும் வழங்கப்பட்டது.இம்முகாமில், கால்நடை பாராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.எட்வின் ஜேம்ஸ், துணை இயக்குநர் (கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபி விருத்தி) மரு.கார்த்திக், உதவி இயக்குநர்(விருதுநகர்) மரு.பழனிசாமி, உதவி இயக்குநர்(கால்நடை புலனாய்வுப் பிரிவு) மரு.அரவிந்தன், கால்நடை மருத்துவப் பணியாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply