“ஜோசப் விஜய் எனும் நான்” . CHIEF MINISTER OF TAMILNADU
பல பிரச்சனைகளுக்கு இடையே, எதிர் கட்சிகளின் பதவி மோகம் அதிகரித்து, பதவிக்காக அவர்கள் என்ன மாதிரி எல்லாம், முறையற்ற சிந்தனை செய்தனர் என்பது தெளிவாகவே புரிந்தது. எப்பேர்பட்ட நயவஞ்சகர்கள் என்று மக்கள் அனைவரும் புரிந்து கொண்டனர்.இவர்களுடைய ஆடு புலி ஆட்டத்தில், அமைதியாக சுயமாகச் சிந்தித்து, தன்னுடைய வெற்றியைவிட்டு விடாமல் எதைச் செய்ய வேண்டுமோ அதை மாத்திரம் செய்து, முதலமைச்சர் பதவி ஏற்றுள்ள திரு.விஜய் அவர்களுக்கு ராஜபாளையம் டைம்ஸ் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று த.வெ.க., தலைவர் விஜய்க்கு முதல்வராக கவர்னர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார் . பதவியேற்புவிழா துவங்கியது. முதலாவதாக வந்தே மாதரம் பாடலை கலைக்குழு வினர் பாடினர்.அதை தொடர்ந்து தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன்பின்பதவியேற்பு நிகழ்ச்சி துவங்கியது. முதலில் முதல்வர் விஜய்க்கு, கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழி மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்து, முதல்வராக விஜய் பதவியேற்றார். இந்நிகழ்வு காலை 10:17 முதல் 10:20 மணி வரை நடந்தது. தொண்டர்கள் விசில் சப்தத்தை எழுப்பி,டி.வி.கே., என உற்சாக குரல் எழுப்பினர்.
முதல்வர் பதவியேற்பு விழாவில் 'நல்லதே நடக்கும்' என பாசிட்டிவாக முதல் பேச்சை முதல்வர் விஜய் துவக்கினார். தன் பேச்சில் 'அரசின் கடன் சுமை குறித்து வெள்ளை அறிக்கை கொடுப்போம். நான் தவறு செய்ய மாட்டேன் ,செய்யவும் விடமாட்டேன்' என சூளுரைத்தார். மேலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கவும், இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருட்கள் தடுப்பு போலீஸ் நிலையங்கள்உருவாக்குவதற்கான மூன்று கோப்புகளிலும் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார்.
ஒரு சாதாரண உதவி இயக்குநருக்கு மகனாக பிறந்த எனக்கும், வறுமை என்றால் என்னவென்று தெரியும்; பசி என்றால் என்னவென்று நன்றாகவே எனக்கு தெரியும். நான் ஒன்றும் பெரியமன்னர் பரம்பரையில் இருந்து வந்து விடவில்லை. இந்த அரசியல் பயணத்தில், எனக்கு எவ்வளவோ கஷ்டங்கள், அவமானங்கள் ஏற்பட்டன.
என் வலி, வேதனைகளை தங்களுடையதாக நினைத்து, என் கூடவே நின்று, 'ஜோசப் விஜய் எனும் நான்' என்பதை, மக்கள் உண்மையாக்கி இருக்கின்றனர். நான் ஒன்றும் தேவதூதன் கிடையாது. நானும் இயல்பான வாழ்க்கை வாழும் சாதாரணமான மனிதன் தான்.நான் முன்பே சொன்னது போல, 'அது செய்வேன், இது செய்வேன்' என பொய்யான வாக்குறுதிகள் எல்லாம்கொடுத்து, மக்களை ஏமாற்ற மாட்டேன்; எது சாத்தியமோ, அதை மட்டும் தான்செய்வேன், எனக்காக குரல் கொடுத்ததற்கும், என்னை ஆதரித்து கூடவே நின்றதற்கும், உங்கள் எல்லாருக்கும் நன்றி. நம்பிக்கையுடன் இருங்கள்; நல்லதே நடக்கும்.
முதல்வர் விஜய் தன் பேச்சின் போது, அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் ,விஜய் மாமாவுடைய குட்டி நண்பா, நண்பீஸ். அவர்களால் தான் இது நடந்திருக்கிறது. உங்களுக்காக, உங்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து, எல்லா நல்ல விஷயங்களையும், உங்களுக்காக இந்த விஜய் மாமா செய்து கொடுப்பான், குட்டீஸ்களுக்கு நன்றி என்றார்.
கஷ்டப்பட்டு வாங்கிய, இப்பதவியை அடுத்த 5 ஆண்டுகள் தக்க வைத்துக் கொள்ள, குள்ள நரிகளின் தந்திரத்தில் சிக்காமல், சொல்லிய வாக்குறுதிகளைச் சிறப்பாகச் செய்து, தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுவார் ,என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள் அனைவருமே காத்திருக்கின்றனர். செய்வாரா விஜய் !
0
Leave a Reply